சிரியாவில் செயல்படும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவை எதிர்கொள்ள, அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட 75 பேர் கொண்ட சிரியப் போராளிகள் குழு ஒன்று துருக்கியில் இருந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஆதரவுடன் சிரியாவில் செயற்பட்டு வரும் இரண்டு கிளர்ச்சிக் குழுவினருக்கு துணையாக இருக்கும் நோக்கில், அமெரிக்காவால் பயிற்சிய ளிக்கப்பட்ட இந்தப் போராளிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியா வைத் தளமாக கொண்டு செயற்பட்டு சிரியாவில் இடம்பெறும் மோதலை கண் காணித்து வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட சிரியர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் மாத்திரமே தற்போது அங்கு சண்டையில் ஈடுபட்டு வருவதை அண்மை யில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் ஆயிரக்கணக்கான சிரியர்களுக்கு பயிற்சியளிக்க இருப்பதாக வெளியான தகவல் அண்மையில் ஏளனத்துக்கு உள்ளானது.