வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக இடம்பெற்றதோடு, அமெரிக்காவுக்கெதிரான போர் தொடர்பான அந்நாட்டின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அந்நாட்டின் வரலாற்றில், மிகப்பெரிய இராணுவ மரியாதை இடம்பெற்ற சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜொங் உன், ‘கட்சியினுடைய புரட்சிகரமான ஆயுதங்களின் காரணமாக, ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தொடுக்கப்படும் எந்தவொரு போருக்கும் நாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிததார். கடந்த காலங்களை விடத் தீர்க்கமானதாகக் காணப்பட்ட இந்த உரை, அமெரிக்கா மீது அந்நாடு காட்டிவரும் எதிர்ப்பு மனநிலையில் அடுத்த கட்ட அறிவிப்பாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த உரையின் போது, வடகொரியாவின் அணுஆயுதத் திட்டம் தொடர்பான எந்தவொரு நேரடியான கருத்தினையும் கிம் ஜொங் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.