அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க இன்று விசேட பொது கூட்டம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட பொது கூட்டம் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் அம்பாறை நகர மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9. 30 மணிக்கு இடம்பெறுகிறது.

இக்கூட்டத்துக்கு பேராளர்களாகவும், சாட்சிகளாகவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித வணிகசிங்க, அம்பாறைக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ. எம். ரணசிங்க, அம்பாறை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் எம். எஸ். எம். அன்ஸார், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பொறியியலாளர் யூ. எல். ஏ. நஸார், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இவ்வருடம் 25 ஆவது வருட நிறைவு விழாவை கொண்டாடியது. யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முனைப்புடன் இயங்கிய தொழிற்சங்கம் என்கிற பெருமையை இது கொண்டு உள்ளது. என்பதுடன் விடுதலை புலிகளும் இத்தொழிற்சங்கத்தை ஏற்று அங்கீகரித்து இருந்தனர். இத்தொழிற்சங்கம் தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வருவதுடன் அண்மையில் கேப்பாப்பிலவு மக்களால் மேற்கொள்ளப்பட்ட மண் மீட்பு போராட்டத்திலும் பங்கேற்று உள்ளது. இதன் பிரதான இலட்சியங்களில் ஒன்றாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு உள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கையொப்பம் இட்டு கொடுத்து ஒப்புதல் வழங்கிய அரசியல் கட்சிகளில் இத்தொழிற்சங்கத்தின் அரசியல் பிரிவும் ஒன்றாகும்.
ஆனால் துரதிஷ்டவசமாக என்றும் இல்லாதவாறு மிக பாரிய தலைமைத்துவ நெருக்கடி இத்தொழிற்சங்கத்துக்கு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு உள்ளது. கடந்த பொது சபை கூட்டத்தில் வைத்து போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட தலைவராக எஸ். லோகநாதன் இருக்க இவரை தலைவர் பதவியில் இருந்து இடை நிறுத்தி இருப்பதாக இத்தொழிற்சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட ஒரு தொகையினர் கொக்கரிக்கின்றனர். இத்தொழிற்சங்கத்தின் உடைமைகள், ஆவணங்கள் ஆகியவற்றை இக்குழுவினர் திருடி முறைகேடாக பயன்படுத்துவதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இப்பிரச்சினைகளின் பின்னணியில் தொழிற்சங்கத்தின் பொருளாளர் ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் சில வாரங்களுக்கு சொந்த ஊரான நற்பிட்டிமுனையில் ராஜா தியேட்டருக்கு அருகில் வைத்து இரவு நேரம் மிக கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் தாக்குதல்தாரிகளால் இறந்து விட்டார் என்று நினைக்கப்பட்டு விட்டு செல்லப்பட்டார். இவ்வாறான சூழலில் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்து உள்ளதாலேயே விசேட பொது கூட்டத்தை நடந்த நேர்ந்து உள்ளது. தலைமைத்துவ நெருக்கடி அடங்கலான முக்கிய பல பிரச்சினைகளுக்கு இக்கூட்டத்தில் தீர்வு எட்டப்பட உள்ளது.
இத்தொழிற்சங்கம் கல்முனையை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றபோதிலும் மிக அதிகளவான உறுப்பினர்களை வட மாகாணத்தில் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவர்களை கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கு நடப்பு நிர்வாகத்தால் விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று இத்தொழிற்சங்கத்தின் பொருளாளர் ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.