ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது.

இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதற்கே எதிர்ப்பு வெளியிட்டுள்ள கலைப்பீட மாணவிகள், குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒன்றியக் கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள் யாவர், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை, ஏற்கெனவே கைவிடப்பட்ட விதிமுறையைக் கொண்டுவருவதற்கான காரணம் என்ன, பொதுக்கூட்டத்துக்கு முன்னறிவிப்பு விடுவிக்கப்படாமைக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

குறித்த கூட்டம் இடம்பெறும் போது, ‘சேலை அணிந்தால் மதிப்போம் இல்லையேல் மிதிப்போம்’, ‘சேலை அணியாதவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை தொடர்பாக விளக்கம் வழங்கப்படுமா எனவும் வினவப்பட்டுள்ளது. மேலும், இவ்விடயத்தை கலைப்பீடத்தினைச் சேர்ந்த அனைத்து பெண் மாணவர்களும் இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு ஒன்றியத்தால் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சுற்றுநிருபத்தினை முற்றாக நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.