’ஆளுநரும் அதிகாரிகளும் அக்கறை எடுக்கவில்லை’

எமது நியாயமான போராட்டம் தொடங்கி மூன்று மாதங்கள் நெருங்குகின்றபோதும் உயர் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட எவரும் கவனத்தில் எடுக்காததால் நாம் இந்தப் பாதயாத்திரைப் பேரணியை எமது போராட்டத்தின் ஒரு வடிவமாக ஆரம்பித்துள்ளதாக, செவ்வாய்க்கிழமை மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக தலைமை வளாகத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரைப் பேரணி, ஏறாவூர் நகர சபை வரை சென்று பிர்சாரத்துடன் முடிவுற்றது.

‘இறுதி இரத்தத் துளி சிந்தும்வரை போராடுவோம்’ எனும் முகப்பு வாசகத்தைப் பதித்துக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அப்பல்கலைக்கழக நுழைவாயிலில் கறுப்புக் கொடி கட்டி, பந்தல் அமைத்து  5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 07.06.2017 அன்று முதல் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம், இப்பொழுது 85 நாட்களைக் கடந்துள்ளது.

இந்தப் பாதயாத்தரைப் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மாணவப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

“கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்களில் நிறைவு செய்யவேண்டிய  பட்டப்படிப்பு 6 வருடங்களில் நிறைவடைவதால் 2 ஆண்டுகள் மேலதிகமாக வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது.

“சி.சி.டி.வி கமெராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் போதுமான சுதந்திரம் இல்லை.

“மாணவர்கள் நியாயமற்ற முறையில் இடைநிறுத்தப்படுகிறார்கள.; நிர்வாகம் மாணவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்.

“நாம் இங்கு நடக்கும் முடிவுறாத, கவனம் செலுத்தப்படாத அநீதிகளுக்கெதிராகவே போராடுகிறோமேயன்றி, தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்தவில்லை. மேலும் இது சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே எழுச்சியுடன் போராட்டம் முன்கொண்டு செல்லப்படுகின்றது” என்றனர்.