இந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது?

ஜூன் 16 அன்று கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களால் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மணல்மேல்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார் தங்கச்சிமடம் சேசு. ஜூன் 13-ல் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லியம் ஹைடோவின் விசைப்படகு, அன்று இரவே நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. கரோனா மற்றும் தடைக்கால நிறுத்தம் போன்றவற்றுக்குப் பின்னான பயணம் அது. அதிகம் பராமரிக்கப்படாத பழுதான பழைய விசைப்படகு என்பதால், ஆழ்கடலில் படகுக்குள் கடல்நீர் வர ஆரம்பித்திருக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பம்ப் வேலை செய்யவில்லை. படகு மூழ்கும் அபாயத்தில் இருக்க, அனைவரும் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு கடலில் சாடியிருக்கிறார்கள்.