இரு நாள்களாக கிழக்கில் கன மழை

கிழக்கு மாகாணத்தில் கடந்த இரு நாள்களாக கனத்த மழை பெய்து வருகின்றது. இதனால் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் தாழ் நிலங்கள் பல வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், பாலம்போட்டாறு பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தம்பலகாமம் கடவாணை அணைக்கட்டின் மேலாக வெள்ளநீர் வடிந்தோடுகிறது.

நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொதுமக்ககள் கவலை தெரிவிக்கின்றனர்.

சமையலறை, வீட்டுத்தளபாடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் ஜின்னா நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இது விடயமாக அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பல தடவைகள் முறையிட்டும் வடிகான் வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுவரை கவனத்தில் கொள்வதில்லை என ஜின்னா நகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி 116.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், நவகிரியில் 29.0 மில்லிமீற்றரும் தும்பங்கேணியி 43.0 மில்லிமீற்றரும் பாசிக்குடாவில் 108.5 மில்லிமீற்றரும் உன்னிச்சையில் 39.0 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை 19.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.