இறுதி அஞ்சலிக்காக லக்னோ சென்றார் பிரியங்கா

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர்  சென்ற கார் மோதியது. இதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர்  அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர்   பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில்  கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்தார் பிரியங்கா காந்தி .