இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை

இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், ஞானசாரரின் விடுதலையை வரவேற்பதாகவும் ‘வந்தேறு’ சமயங்களான கிறிஸ்தவம், இஸ்லாத்துக்கு எதிரான போராட்டத்தில், பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சைவத்தை ‘வந்தேறு’ சமயங்களில் இருந்து காக்க, பொதுபல சேனா துணை நிற்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

சிங்களத் தேசியவாதிகள், தமிழர்களை வந்தேறுகுடிகள் என்கிறார்கள். இவர், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ‘வந்தேறு’ மதங்கள் என்கிறார். இதன் மூலம், தமிழர்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கான வேலைத்திட்டம் அரங்கேற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதன் இன்னொரு பகுதியாகவே, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பிரிஷத் ஆகியவற்றின் உறுப்பினர்களை, இலங்கைக்கு இவ்வமைப்பு அழைத்துள்ளது.

இவ்விடத்தில், 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 15ஆம் திகதி, பி.பி.சிக்கு மறவன்புலவு சச்சிதானந்தம் வழங்கிய நேர்காணலில், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்றும், இந்து மதத்துக்கு ஆபத்து என்றார். பௌத்தர்கள் இந்துக்களை அழிப்பதிலும் இந்து ஆலயங்களைத் தரைமட்டமாக்குவதிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர் என்றார். இன்று, மூன்று வருடங்களின் பின்னர், பொதுபலசேனாவின் துணையை நாடுகிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது; ஏன் நிகழ்ந்தது.

அதே நேர்காணலில், தாங்கள் விஸ்வ ஹிந்து பிரிஷத்தின் கோட்பாடுகளோடு உடன்படவில்லை என்றும் அவர்களோடு சேர்ந்து இயங்குவது சாத்தியமில்லை என்றும், தாங்கள் தனி அமைப்பு என்றும் சொல்லியிருந்தார். இப்போது அவர்களை அழைத்து, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அவரால் முடிந்திருக்கிறது. ஆக, மொத்தத்தில் தமிழர்களைப் பிரித்து மத ரீதியாக சிண்டு முடிந்து விடும் வேலைத்திட்டத்தையே, இலங்கைச் சிவசேனை செய்கிறது. கோட்பாடுகள் எதுவுமற்ற, வேறு யாருடையதோ அரசியல் நலன்களுக்காவே, இவ்வாறான அமைப்புகள் தோற்றம் பெறுகின்றன.

விஸ்வ ஹிந்து பிரிஷத் என்ற இந்துத் தீவிர நிறுவனம், 1970களின் இறுதிப் பகுதியில் இலங்கையில் ஆள்திரட்ட முயன்றது. எனினும், 1983க்குப் பின்பே தமிழ்த் தேசியவாதிகளுக்கும், இந்தியாவின் இந்துத்துவ நிறுவனத்துக்கும் அரசியல் உறவுகள் தோன்றின. இதனால், அது தேவையற்றுப் போனது.

இருந்தபோதும், 1990களின் இறுதிப்பகுதியில், இந்தியாவில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க இலங்கையில் விஸ்வ ஹிந்து பிரிஷத்தின் காலூன்றலுக்கு வழிகோலியது. இது மெதுமெதுவாக நிறுவனமயமாக்கலுக்கும் கைப்பற்றலுக்கும் வழிகோலியது. இதற்குச் சிறந்த உதாரணம், கதிர்காமத்தில் உள்ள தெய்வானை அம்மன் ஆலயமும் அதன் மடமும். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், அதன் நிர்வாகமும் கோவில் நடைமுறைகளும் தமிழர்களின் கைகளில் இருந்தன. இன்று இந்தி மொழி பேசுகிற ‘இந்துக்களின்’ கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது.

மறவன்புலவு சச்சிதானந்தம் அதே பி.பி.சி நேர்காணலில், சிவசேனையின் தலைவர் பால் தாக்கரேயை புகழ்கிறார். இவர் புகழ்கிற பால் தாகக்ரே தான் மும்பையில் தமிழர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் எதிரான கட்டற்ற வன்முறையை அரங்கேற்றியவர். தமிழர்களின் நலன்களுக்கு எதிரான அமைப்பு சிவசேனை. அதனுடன் கைகோர்ப்பது யாருடைய நலன்களுக்காக என்பதை, நீங்களே முடிவு செய்யுங்கள்.

இந்தியாவில் பயிற்றிய மதவாத விஷமிகள், இலங்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர்; மேடைப் பேச்சுகளும், பத்திரிகை விளம்பரங்களும், அறிக்கைகளும் செய்ய இயலாத காரியங்களை அவை செய்கின்றன. மக்களிடையே மதப்பூசலைக் கிளறக்கூடிய விஷமங்களில், அவை இறங்குகின்றன. மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சேதம் விளைவிப்பது, மதநிந்தனையான காரியங்களைச் செய்வது, சிறு குழப்பங்களை விளைவிப்பது போன்றவை மூலம், மக்களிடையே மோதல்களைச் சிறு அளவில் மீண்டும் மீண்டும் தூண்டுவதன் மூலம், சமூக உறவுகளைச் சீர்குலைப்பது அவர்களின் நோக்கம்.

மதத் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் விடச் சாதாரண மக்கள் விவேகமானவர்கள். வெகுசனப் பங்குபற்றல் மூலம், சமூகச் சீர்குலைவாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். இன்று இலங்கையும் தமிழர்களும் வேண்டிநிற்பது மதத்தின் பெயரிலான பிளவுகளையும் மோதல்களையும் அவலங்களையும் அல்ல.