இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அன்னத்துக்கு ஆதரவு

தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம், வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இன்று (03) காலை 10 மணியளவில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகி, மாலை வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், சிறிநேசன், சி.சிவமோகன், சீ.யோகேஸ்வரன், எம். சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகரசபைகளின் தலைவர்களான ஆர்னோல்ட், தி.சரவணபவன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு வழங்குவது என்ற ஏகோபித்த முடிவை எடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, புளொட் தலைமைகளுடன் கலந்தாலோசித்து, முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், தமிழரசுக் கட்சி கையளித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதே, பலரின் எதிர்பார்ப்பாக இருந்துவந்தது.

ஏனைய சிறுபான்மைக் கட்சிகள், தங்களது முடிவுகளை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், தமிழரசுக் கட்சி மட்டும், ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவரும்வரை காத்திருந்தது.

விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததன் பின்னரே, தங்களது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிப்போம் என அறிவிப்பும் விடுத்திருந்தது.

இந்நிலையில், பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, தமிழரசுக் கட்சி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் முடிவு தொடர்பாகத் தனக்கு, தமிழரசுக் கட்சி, தொலைபேசியில் அறிவித்ததாக, சித்தார்த்தன் எம்.பி, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இம்முடிவு தொடர்பில் கருத்துக் கேட்பதற்காக, செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்ட போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் ஓரளவு திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்திருந்த தமிழரசுக் கட்சியில் மத்திய குழு பிரதிநிதிகள், இறுதியில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.