இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் மீது ரஷ்ய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தர். அண்மையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பொதிகள் அடங்கிய கொள்கலனில் வண்டு ஒன்று காணப்பட்டதாக தெரிவித்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு, ரஷ்யா தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இலங்கையிலிருந்து ரஷ்யா சென்ற பல்வேறு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. அந்த வகையில் நேற்றைய தினமும் (24) இலங்கையைச் சேர்ந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினர் ரஷ்யா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குழுவினர் ரஷ்ய அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை அடுத்து, இலங்கை மீதான குறித்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். குறித்த தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.