‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கே எமது ஆதரவு’

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், தமது சங்கமானது 30 வருட அனுபவத்தைக் கொண்டு வடக்கு – கிழக்கை மய்யமாகக் கொண்ட பாரிய தொழிற்சங்கமென்றார்.

தமது தொழிற்சங்கமானது பாரிய திட்டங்களை கொண்டு தொழிற்சங்க ஊழியர்களின் ஊடாக மக்களுக்கும் சேவையாற்றி வந்திருக்கிறதெனத் தெரிவித்த அவர், மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து இருக்கிறோமெனவும் அந்த வகையில் சுமார் முப்பது வருட காலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வந்தவர்களெனவும் கூறினார்.

“இம்முறை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆதரிப்பதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கல்முனையில் இடம்பெற்ற தலைமைப்பீட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

“ஏனெனில் வீர வசனங்களைப் பேசி பேசியே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் காலத்தை கடத்தி விட்டனர். இனியும் நாங்கள் காலத்தை கடத்த விரும்பவில்லை. அந்த வகையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஆதரித்து ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஒன்று கூடியிருக்கிறோம்” எனவும், ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சி.கிரிதரன், “இம்முறை பொதுத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் எட்டாம் இலக்கத்தில் போட்டியிடுகிறேன்” என்றார்.

தனக்கும் தமது கட்சிக்கும் பூரண ஆதரவு தெரிவுக்கும் முகமாக, தம்முடன் இணைந்து செயலாற்றவதற்காக, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் வருகை தந்துள்ளார்களெனவும், அவர் தெரிவித்தார்.

“அவர்கள் இனிவரும் காலத்தில் தங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும், அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கும் முன்வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் எனக்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிப்பதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.