உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க’சி.விக்கு தகுதியில்லை’

‘உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் மாகாண சபை அதிகாரத்தில் இல்லை’ என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த மற்றுமோர் ஓய்வுபெற்ற  அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தவும், அந்த அறிக்கையின் பிரகாரம் நிதி நிர்வாக நடவடிக்கைகள் முன்மொழியப்படும் என்பது தொடர்பில் பிரேரணையொன்றை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சபையில் நேற்றுக் கொண்டு வந்தார்.

எனினும், அதில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளமையால், உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது என தான் உணர்வதாகவும், ஆதலால், முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின்னர் பிரேரணையைக் கொண்டு வருவேன் எனக்கூறி, கல்வி அமைச்சர் உடனடியாக பிரேரணையை வாபஸ் வாங்கினார். இதன்போது, குறுக்கிட்ட அஸ்மின், ‘உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு தகுதியில்லை’ என்றார்.

இதன்போது, கருத்துக்கூறிய எம்.கே.சிவாஜிலிங்கம், ‘நீதிபதிகள் என்றால் திறமையானவர்களும், நேர்மையானவர்களும் என்று சொல்ல முடியாது. வல்வெட்டித்துறை நகர சபையில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில் இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி, விசாரணையை செய்வதை விட்டுவிட்டு, என்னையும், அவைத்தலைவரையும் பற்றி அவதூறு பரப்புவதில் குறியாகச் செயற்பட்டார்’ என்றார்.