எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்று சாதித்துக் காட்டியது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், மாவை சேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், சிசிர ஜெயக்கொடி, முத்துக்குமாரண, சமல் ராஜபக்ச, எஸ். சிவமோகன், புத்திக பத்திரண, ஜனக பண்டார தென்னக்கோன், வசந்த சேனநாயக்க, வசந்த அலுவிகார, கே.எஸ்.என். பெரேரா, ரொமேஸ் பத்திரண, நிசாந்த முத்துஹெட்டிகம, சுஜீவ சேனசிங்க, காஞ்சன விஜேசேகர, மோகன் லால் கிரேரோ, பாலித தெவாரப்பெரும, எச்.எம்.என்.பி. டி சில்வா, இம்ரான் மஹ்ரூப், கே.ஏ.எஸ்.ஜெயரத்ன, திலும் அமுனுகம, லொகான் ரத்வத்தை, லக்ஸ்மன் கிரியெல்ல, உதய கம்மன்பில, வண. அத்துரலியே ரத்தன தேரர், பி.எச்.விஜேபால, எஸ்.பிரேமரத்ன, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, வடிவேல் சுரேஸ், டினுசன், ஜே.பி.ஆர்,கே. விஜேரத்ன ஆகிய உறுப்பினர்களே வரிச்சலுகையின் கீழ் இறக்குமதி செய்த வாகனங்களை கைமாற்றம் செய்துள்ளவர்களாவர்.

இந்தச் சலுகையின் கீழ் பெரும்பாலும் லான்ட் குரூசர் வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. லான்ட் குரூசர் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்பவர் சுங்கக் கட்டணமாக, சுமார் 35 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என்றும் ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, 30 தொடக்கம், 44 மில்லியன் ரூபாவை சுங்க கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

(Jeyabalan Thambirajah)