எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின்; ஜூன் 3ம் திகதி அறிவிப்பு

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க. பெற்றுள்ளது. தி.மு.க. சட்டசபை தலைவராக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கடிதம் சட்டசபை செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஜூன் 3ம் திகதி முறைப்படி வெளியாகிறது.

இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் 3ல் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை எதிர்க் கட்சி தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படும். புதிய சபாநாயகரை சபை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர். எதிர்க்கட்சித் தலைவராகும் ஸ்டாலினுக்கு அரசு கார் வழங்கப்படும். ஒரு நேர்முக உதவியாளர், இரண்டு அலுவலக உதவியாளர்கள், ஒரு சாரதி, அரச சார்பில் வழங்கப்படும். சட்டசபை வளாகத்தில் தனி அறையும் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சட்டசபை வளாகத்தில், எதிர்க்கட்சிதலைவர் அறையை தயார் செய்யும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.தி.மு.க. 89 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவருக்காக எதிர்க்கட்சி தலைவர் அறையை தயார் செய்யும்பணி நடந்து வருகிறது.கடந்த முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் அந்த அறையை பயன்படுத்தாததால், பூட்டியே கிடந்தது. தற்போது அறை புதுப்பிக்கப்படுகிறது.கடந்த முறை தி.மு.க. எதிர்க் கட்சியாக இல்லாததால் சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 89 எம்.எல்.ஏ. க்கள் உள்ளதால் அனைவரும் அமரும் வகையில் பெரிய அறை ஒதுக்கி தரும்படி தி.மு.க. சார்பில் சட்டசபை செயலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.