எனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தலைமை தாங்கி வருவதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கமான அலுவலகத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க குற்றஞ்சாட்டினார். தனது ஆட்சிக் காலத்தைவிட தற்பொழுது அடிப்படைவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் அடிப்படைவாதத்தை இனவாதமாக்கி வருகின்றனர். இனவாத செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதியொருவர் தலைமை தாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சந்திரிகா குமாரதுங்க இதனைத் தெரிவித்தார்.

சிறுபான்மையினரிலும், பெரும்பான்மையினரிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள் மிகவும் சிறியதொரு குழு மாத்திரமே. நாட்டில் பெரும்பான்மையானவர்களுக்கு சரியான முறையில் விளக்கமளித்து உண்மை நிலைமையை எடுத்துக் கூறுவதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

புலிகளை ஒழித்திருக்காவிட்டால் இன்று நீங்கள் நல்லிணக்கம் பற்றிப் பேச முடிந்திருக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முடியும் எனக் கூறியதுடன், தனது ஆட்சிக்காலத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

“1994ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரான்ஸ் நிறுவனமொன்றை அழைத்து சிங்கள மக்கள் மத்தியில் கணக்கெடுப்பொன்றை நடத்தியிருந்தேன். அதில் யுத்தத்தை இடைநிறுத்தி சமாதானத்துக்குச் செல்வதா இல்லையா போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு 23.3 வீதமானவர்கள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்துக்குச் செல்லுமாறு கூறியிருந்தனர். இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தியிருந்ததுடன், யார் இதனை நடத்துகிறார்கள் என்பது எனக்கும் ஒரு சில அதிகாரிகளுக்கும் மாத்திரமே தெரிந்திருந்தது” என்றார்.

இந்த கணக்கெடுப்பின் முடிவை வைத்துக் கொண்டு அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேரை தெரிவுசெய்து ‘வெண் தாமரை’ சமாதான திட்டத்தை ஆரம்பித்தேன். இதன் ஊடாக நாட்டின் கிராம மட்டத்தில் சமாதானம் குறித்த விழிப்புணர்வுகளும்செ யலமர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இக்காலப் பகுதியில் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வரைபையும் வெளியிட்டிருந்தேன். இவ்வாறான மாற்றங்களைச் செய்து இரண்டு வருடங்களில் மீண்டும் குறித்த நிறுவனத்தைக் கொண்டு கணக்கெடுப்பை நடத்தியிருந்தேன். அதில் 68 வீதமானவர்கள் சமாதானத்தை விரும்பியதுடன், அரசியலமைப்பு வரைபுக்கும் ஆதரவு வழங்கியதுடன், சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். இவர்களுடன் வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டிருந்தால் 85 வீதமான ஆதரவு கிடைத்திருக்கும் எனத் தெரிவித்தார்.

பிழையை உணர்ந்துள்ள ஐ.தே.க

நீங்கள் முன்வைத்த அரசியலமைப்பு வரைபுத் திட்டத்தை கிழித்தெறிந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருக்கின்றார். இவர் தீர்வொன்றை முன்வைப்பாரா என மற்றுமொரு ஊடகவியலாளர் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவர், இதுதான் அரசியல். நான் ஜனாதிபதியாக நீடித்துவிடுவேன் என்பதைத் தடுப்பதற்காக அப்போது எனது அரசியலமைப்பு வரைபை எதிர்த்தனர். இது தவறு என்பதை ஐ.தே.கவின் தலைமை உள்ளிட்ட பலர் உணர்ந்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளனர். இவ்வாறான பின்னணியிலேயே ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கும், பிரதமராகுவதற்கும் நான் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அப்போது நான் முன்வைத்தபோது எதிர்த்த வரைபையே இவர்கள் மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் என்றார்.

அரசாங்கமே தீர்மானிக்கும்

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா ,இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இது பற்றியே முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர்: குறித்த செயலணியானது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட குழுவாகும். இதில் துறைசார் நிபுணர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களே மக்களின் கருத்துக்களைப் பெற்று இந்த அறிக்கையை முன்வைத்துள்ளனர்.