எம்மைக் கொல்ல தீவிரத் திட்டம்

தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட் தொகுதியின் பிரதானி காமினி செனரத்தின் சாரதியே, இந்தச் சதித்திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இந்தத் தகவல்களை அமைச்சர் வெளியிட்டார்.

‘மதுரையிலிருந்து படகு மூலம் நாட்டுக்குப் பிரவேசிக்கும் கொலையாளி, அந்த நபரை, கொலைசெய்துவிட்டு, மீண்டும் படகின் மூலமாக தப்பிச்செல்லும் வகையிலேயே, திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனூடாக கொலையாளி மற்றும் ஒப்பந்தக்காரரை எவ்வகையிலும் கண்டுபிடித்துக்கொள்ள முடியாது என்றும் அச்சாரதி கூறியுள்ள கருத்திலிருந்து புலனாகிறது.

கொலைச்சதித் திட்டம் அம்பலமானதையடுத்து, எங்களது உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அதே அச்சுறுத்தலையே முகங்கொடுத்துள்ளார்.

காமினி செனரத் மற்றும் அவரது செயலாளர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, அடுத்த வாரங்களில் தெரிந்துகொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ‘நாளை வருவோம், நாளை வருவோம் என்று பயமுறுத்துகின்ற ஊழல், மோசடிப் பேர்வழிகளான ராஜபக்ஷக்கள், தங்களைக் கைதுசெய்யுமாறு கொக்கரிக்கின்றனர். எனினும், எங்களுடைய ஆட்கள் அவர்களைக் கைதுசெய்வதில்லை’ என்று தெரிவித்ததோடு, அந்த ஆட்சியில் இடம்பெற்ற முக்கிய கொலைகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறினார்.

‘ராஜபக்ஷவுக்கு முடியாத காலத்தில், அவருடன் இருந்தவன் நான். ராஜபக்ஷக்களையும் அவருடைய குடும்பத்தினரையும் நன்கறிவேன். அவர்களை 40 வருடங்களுக்கு மேல் நன்றாகத் தெரியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்திருந்தால், உயிருடன் இருந்திருக்கமாட்டோம். ஜோசப் முகாம் வதைமுகாம் என்றனர். எனினும், அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா அதிகாரிகள், அது வதைமுகாம் இல்லையென்று அறிக்கையிட்டுள்ளனர். அது தொடர்பில் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையில்லை’ என்றார்.