எல்லை மீள்நிர்ணயம்: சிறுபான்மைக் கட்சிகள் சிவப்பு எச்சரிக்கை

“எம்முடன் கலந்தாலோசிக்காமல் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான வர்த்தமானியை அச்சடிக்க வேண்டாம்” என சிறுபான்மைக் கட்சிகள் கோரியுள்ளன. “எல்லை மீள்நிர்ணய அறிக்கையை அவதானிக்கின்ற போது, அதிலுள்ள விடயங்கள், சிறுபான்மை இனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. “ஆகையால் எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, எம்முடன் கலந்துரையாட வேண்டும்” என்றும் அக்கட்சிகள் கோரியுள்ளன.

சிறுபான்மைக் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸல்லாமில், கலந்துரையாடலில் நேற்று மாலை ஈடுபட்டன. அந்த கலந்துரையாடலையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், “அரசியலமைப்பத் தொடர்பிலான திருத்தங்களைக் கூட்டாக முன்வைப்பது தொடர்பில், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், இன்று கலந்துரையாடியுள்ளோம்.

“நாட்டின் அதிகாரப் பகிர்வு, நாட்டின் இறைமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைக்கவும், கூட்டாக மாற்று யோசனைகளைச் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளோம்.

“எல்லை மீள்நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சனங்களைக் கருத்தில் எடுக்க, சட்டத் திருத்தங்களைச் செய்யாமல், அதனை அவசரமாக நடைமுறைப்படுத்துவது, எமக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்த சர்ச்சைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான், வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், இந்த அறிக்கையில் 54 இடங்களில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தள்ளார். சிறுபான்மை மற்றும் அனைத்துக் கட்சிகளுடன் தீர்க்கமாகக் கலந்துரையாடி, ஒருமித்த கருத்தைப் பெற்ற பின்னர், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்தது” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அறிக்கையை, வர்த்தமானியில் வெளியிட அவசரப்பட வேண்டாம் என, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

“அரசியலமைப்புப் பேரவைக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்க, இன்று (நேற்று) நாங்கள் கூடியிருந்தோம். ஜனாதிபதி முறைமை, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல், மதம், மொழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கூட்டறிக்கை, அடுத்தவாரம் வழங்கப்படும்.

“இந்த நேரத்தில் அதனைவிட முக்கியமான விடயமாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கை உள்ளது. இந்த அறிக்கையில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகத் தெரிகின்றது. இது தொடர்பில் அவசரப்பட வேண்டாம் என, பைஸர் முஸ்தபா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

“நியாயமான தேர்தல் முறையை உருவாக்கி, சகலருக்கும் நியாயமான முறையிலான தேர்தல் நடந்தாலே, அது ஜனநாயக ரீதியலான தேர்தலாக அமையும்” என்றார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில், சிறுபான்மை மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில், ​பொது இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில், இன்று (நேற்று) கலந்துரையாடி, சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அவை, விரைவில் வௌிப்படுத்தப்படும்.

“இன்று, நான்கைந்து கட்சிகள் கூடியிருந்தாலும், ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் விரைவில் கூடி, இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவார்கள். சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளதால், இந்த முயற்சியை இடைநிறுத்தி, அது தொடர்பில் பொது இணக்கப்பட்டுக்கு வந்த பின்னர், தேர்தலை முன்னெடுப்பதே சிறந்தது” என்றார்.