‘ஐ.எஸ்-இலிருந்து மூவர் அனுப்பிய பணத்தை, படுக்கையறையில் பத்திரமாய் வைத்தேன்’

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக, சிரியாவுக்குச் சென்ற முதலாவது இலங்கையர்கள் என்று கருதப்படும் மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட், அவரின் சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றுமோர் இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோராலேயே அந்தப் பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், அந்தப் பணத்தின் ஒருதொகுதி, தெஹிவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்றுமுன்தினம் (15) கொண்டுவந்தது.

மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட் என்பவரின் பெற்றோரால், கல்கிஸை, ஸ்ரீமத் பரான் ஜயதிலக்க மாவத்தையிலுள்ள வீட்டுக்கு, அந்தப் பணத்தின் ஒருதொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில், அவருடைய தந்தை, தன்னுடையப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார் என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருந்த தன்னுடைய மகனான மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட்டின் தங்கையான அஸ்மாவுடன், இந்த நாட்டுக்கு வரும் ஒருவரால் பொதியொன்று கொண்டுவந்து தரப்படுமென, சிரியாவிலிருந்த மூவரில் மற்றொருவரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவரால், 2018 செப்டெம்பர் மாதத்தில், ஒருநாளன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தனது முறைப்பாட்டில் தந்தை தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப்பின் ஊடாக அழைப்பொன்றை ஏற்படுத்தும் வரையிலும் அந்தப் பொதியை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் மொஹமட் முஹுசீன் இஷாக் அறிவுறுத்தியதாக, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வட்ஸ்அப் அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், சில நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மறைத்திருந்த பெண்ணொருவர், தன்னுடைய வீட்டுக்கு வந்து, சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருக்கும் மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவருக்கு வழங்குமாறுகூறி, பொதியொன்றை, தன்னுடைய மகளிடம் வழங்கியுள்ளார். அந்தப் பொதியை சோதிக்காமல், வீட்டிலிருந்த அலுமாரியில் அப்படியே வைத்துவிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், நான்கு நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மூடிய நபரொருவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைரிடம் கொடுக்குமாறு மற்றொரு பொதியை வழங்கிவிட்டுச் சென்றார் என்றும், அந்தப் பொதியையும் அதே அலுமாரியிலேயே வைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

“அதன்பின்னர், மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவர் தனக்கு அழைப்பையெடுத்தார். அந்தப் பொதிகளிலிருக்கும் பணத்தை, அமெரிக்க டொலர்களாக மாற்றி, தான் அறிவிக்கும் வரையிலும், வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு அறிவித்தார்.

“அவ்விரு பொதிகளையும் பிரித்துப்பார்த்த போது, அதில் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்தது.

“அந்தப் பணத்தை வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்கள் மூன்றுக்கு எடுத்துச்சென்று, அமெரிக்க டொலர்களாக மாற்றி, வீட்டில் படுக்கையறையில் பாதுகாப்பாக வைத்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

“மேலே குறிப்பிட்டவாறே, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்தப் பணத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளோம்.

இந்த 23,500 ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களும் சட்டபூர்வமான தாள்களாக என்பதுத் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு, மத்திய வங்கிக்குக் கட்டளையிடுமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக” கொண்டுவந்தனர்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க டொலர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியின் நிதி முகாமையாளருக்கு கட்டளையிட்டது.

சிரியாவில் இடம்பெற்றுவரும் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 இலட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து முதன்முதலில் சென்றவரெனக் கருதப்படும் மொஹமட் முஹுசித் இஷாக் அஹமட் மற்றும் அவரது சகோதரரான சர்ஃபாஸ் நிலாம் ஆகிய இருவரும் மற்றொரு இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகிய மூவரும், இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர் என்றும் அந்தப் பணத்தில் ஒரு பகுதி, தெஹிவளை பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.