ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள்(05/03/2018) விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா,அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

அதே போன்று உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட கூட்டமைப்பின் இளைஞர்கள் சிலரும் பங்கெடுத்திருந்தனர்.டெலோ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வருகை தந்திருந்தார். முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் பங்கெடுத்திருந்தார்.தென்னிலங்கையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குடும்ப நிகழ்வுகளில் மனக்கசப்புக்களை தாண்டி கலந்து கொள்வது வழமையாகும்.எனினும் தமிழ் அரசியல் தலைவர்களோ யுத்த கள எதிரிகள் போன்று முகங்களை பொது நிகழ்வுகளில் திருப்பி கொள்வது வழமையாகும்.இந்நிலையில், பொது அரங்கில் தமது முரண்பாடுகளை தாண்டி அரசியலில் முன்னாள் ஆயுதக்குழுக்களது பிரமுகர்கள் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியினது நிகழ்வினில் பங்கெடுத்திருந்தமை கவனத்தை ஈர்த்திருந்தது.

இதனிடையே தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் பலருக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போதும் அவர்கள் எவரும் இந் நிகழ்வில் பங்கெடுத்திருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.