ஒபாமா – காஸ்ட்ரோ சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது தனிப்பட்ட முறை யில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளின் இவ்வா றான சந்திப்பு மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. எனினும் இந்த ஆண்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த திங்கட்கிழமை ஐ.நாவில் உரையாற்றிய காஸ்ட்ரோ, அமெரிக்கா, கியூபா மீதான பொருளாதார தடையை தளர்த்தி அமெரிக்க கடற் படை தளம் இருக்கும் குவன்தனாமோ விரிகுடாவை கியூபாவிடம் திருப்பி தரும் பட்சத்திலேயே அதனுடனான சுமுக இராஜதந்திர உறவு சாத்தியமாகும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஒபாமாவுடனான சந்திப்பிலும் காஸ்ட்ரோ இந்த கோரிக்கைகளை முன்வைத் ததாக கியூப வெளியுறவு அமைச்சர் பிரூனோ ரொட்ரிகஸ் சுட்டிக்காட்டி இருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியை நிகழ்வின் போதே இரு நாட்டு தலைவர்களும் முதல் முறை கைகுலுக்கிக் கொண்டனர். அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான உறவை சுமுக நிலைக்கு கொண்டுவரும் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானதை அடுத்து கடந்த 54 ஆண்டுகளாக நீடித்த பகையில் தளர்வு ஏற்பட்டது.