கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

கனடாவில் கியூபெக் நகரில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ் காஜியார் வன்மையாக கண்டித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மக்கள் தொழுகைக்காக திரண்டு காணப்பட்டபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டு 08 பேர் காயப்பட்டு உள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பொலிஸார் நம்புகின்றனர். அத்துடன் இருவரை கைது செய்து உள்ளார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க தலமாகவும், புகலிடமாகவும் உள்ள கியூபெக் இஸ்லாமிய கலாசார நிலையம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் அதிர்ச்சியையும், கவலையையும் ஒரே நேரத்தில் தந்து உள்ளது என்று உவைஸ் காஜியார் தெரிவித்து உள்ளார். இது காட்டுமிராண்டிகளின் கோழைத்தனம் என்று கூறி உள்ள இவர் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.