கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற தேர்தலில் கூட்டணி அவசியம்: கருத்துக் கணிப்பில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், கூட்டணி வைக்காமல் தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியைத் தழுவும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 12-ம் தேதி தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும்ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. அதேபோல எதிர்க்கட்சியான பாஜகவும் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே மற்றொரு முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சியின் தலைவர் தேவே கவுடா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 2019-ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜகவுக்கு கர்நாடக மாநிலத் தேர்தல் அமைந்துள்ளது. அதேபோல, அடுத்து வரும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் வெற்றியும் இதையே சார்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தென் மாநிலங்களில் பாஜக தடம் பதிக்க கர்நாடக மாநிலம்தான் முதல்படியாகும் என்பதாலும், அங்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக தேர்தலில் கூட்டணி வைக்காமல் சந்திக்கும் பட்சத்தில் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் பின்னடைந்து செல்லும் என்று டைம்ஸ்நவ், வோட்டர்ஸ்மூட் ரிசர்வ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுன் இணைந்து தேர்தலை சந்திப்பதால், அந்த கட்சி குறைந்தபட்சம் 40 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இதனால், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாரை ஆட்சியில் அமர வைக்கலாம் என்பதை நிர்ணயிக்கும் கிங்மேக்கராக தேவகவுடா வருவார் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது, கூட்டணியுடனே ஆட்சி அமைக்க வேண்டியது வரும் என்று தெரிவித்தது.

இதற்கிடையே ஜனதாதளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரமேஷ் பாபு கூறுகையில், ‘பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம். நிச்சயம் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் எண்ணம் இல்லை’ என்று தெரிவித்தார்.

அரசியல் ஆய்வு நிறுவனமும் மற்றும் களநிறுவன ஆய்வு நிறுவனமான டிஎஸ் லொம்பார்டின் ஆய்வாளர் அமிதாப் தூபே கூறுகையில், ‘பாஜகவுக்கு கர்நாடகத் தேர்தல் என்பது மிகுந்த முக்கியமானதாகும். தென் மற்றும கிழக்கு மாநிலங்களில் பாஜக சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், இத் தேர்தலை மிகவும் எதிர்பார்க்கிறது. வடமாநிலங்களில் சமீபத்தில்கிடைத்த இழப்பை இதில் ஈடுகட்ட நினைக்கிறது. பொதுத்தேர்தலில் பாஜகவினருக்கு ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கடந்த முறை கிடைத்த வெற்றி எல்லாம் இந்த ஆண்டு இலகுவாகக் கிடைக்காது. வெற்றி கிடைப்பது கடினம்’ எனத் தெரிவித்தார்.