கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு

பிரபல நடிகர் கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து கலாபவன் மணி இறந்த அன்று அவரின் பண்ணை வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ம் தேதி திடீர் என்று இறந்தார்.இது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் ஆல்கஹால் இருந்ததாகக் கூறினர். கேரளாவில் லைசென்ஸ் பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் ஆல்கஹால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள். இதனையடுத்து மதுவில் விஷம் கலக்கப்படிருக்கலாம் என்றும் அதனை அருந்திய கலாபவன் மணி மரணமடைந்து இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாயின.

பின்னர், கலாபவன் மணியின் வயிற்றுப்பகுதி ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அவரது உடலில் பூச்சி மருந்து கலந்து இருந்ததாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முந்தைய நாள் அவருடன் மலையாள நடிகர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். ‘‘கலாபவன் மணி மது அருந்தியபோது நான் அங்கிருந்து சென்று விட்டேன்’’ என்று சாபு வாக்குமூலம் அளித்தார்.

ஜாபர் இடுக்கி, ‘‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம்’’ என்று கூறினார். நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை சாபு மறுத்துள்ளார். ‘‘கலாபவன்மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னைச் சம்பந்தப்படுத்துகிறார்கள். அவருடன் நான் மது அருந்தவில்லை’’ என்று கூறினார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள். கலாபவன் மணி மருத்துவமனையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசர அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர்.

மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி உள்ளார்கள். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி உள்ளனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது பற்றி நடிகர் கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், ‘என் அண்ணனுடன் மது அருந்திய யாரும் பாதிக்கப்படவில்லை. என் அண்ணன் உடலில் மட்டுமே அளவுக்கு அதிகமான மெத்தனால் ஆல்கஹால் இருந்துள்ளது. எனவே அவருடன் மது அருந்திய அனைவர் மீதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது’ என்று கூறியுள்ளதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு நீடிக்கிறது