கல்வியை விட ஹிஜாப் முக்கியம்..: மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை!

இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. சில மாணவிகள் வேறு வழியில்லாமல் ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர். அதுபோன்று நேற்று முன்தினம் அனுமதி மறுக்கப்பட்ட 13 மாணவிகளும், “நாங்கள் ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளில் கலந்து கொள்ள மாட்டோம்” என்று கூறி நேற்று நடைபெற்ற தேர்வைப் புறக்கணித்தனர்.

இரண்டாம் நாளான நேற்று (பிப்ரவரி 15) குடகு மாவட்டத்தில், தந்தை ஒருவர் தன்னுடைய மகளைப் பள்ளியில் விடுவதற்காக வந்தார். பள்ளிக்குள் நுழைந்ததுமே அங்கே நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் வந்து, மாணவியிடம் ஹிஜாப்பை கழற்றும்படி சொன்னார். சிறிது நேரம் கழித்து மாணவி ஹிஜாப்பைக் கழற்ற முற்படும்போது, அதைத் தடுத்து நிறுத்திய தந்தை, மீண்டும் ஹிஜாப்பை அணியுமாறு மகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்பு ஆசிரியை பக்கம் திரும்பிய மாணவியின் தந்தை, “கல்வி முக்கியம்தான். அதைவிட எங்களுக்கு ஹிஜாப் மிகவும் முக்கியம். அதனால் என் மகளை வீட்டுக்கே அழைத்துச் செல்கிறேன். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர், எனது மகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்து விடுகிறேன். இப்போது அழைத்துச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு மகளைக் கூட்டிச் சென்றார்.

பள்ளி ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த பலமுறை முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர். எனது குழந்தையை ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டு, மாணவியை அழைத்துச் சென்று விட்டார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் அரசுப் பள்ளி, கலபுர்கி உருதுப் பள்ளி, பெலகாவி அரசு உண்டு உறைவிடப் பள்ளி, துமகூரு அரசுப் பள்ளி, கொப்பலில் உள்ள மவுலானா ஆசாத் அரசுப் பள்ளி, கதக் நகரில் உள்ள உருதுப் பள்ளி, பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா அரசு உயர்நிலைப் பள்ளி, ஹுக்கேரியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளி, யாதகிரி மாவட்டம் குமரகல்லில் உள்ள அரசுப் பள்ளி, ஹாசன், மண்டியா உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீர்ப்பு வந்தபிறகு எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சில இடங்களில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், பல முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ”ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்ந்தால், அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். எங்களுக்கு கல்வி மற்றும் மதம் மீதான நம்பிக்கை இரண்டுமே முக்கியம். எதையாவது ஒன்றை தேர்வு செய்ய முடியாது. இது அனைத்தும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், இதுகுறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், ஏழு நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் பியூசி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. பழையபடி பிரச்சினை பெரிதாகாமல் இருக்க, பள்ளி, கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.