கிழக்கில் அதிக அளவில் பிழையான உணவு பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்

மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் கவலை!
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை ஏனைய இனத்தவர்களை காட்டிலும் அதிக அளவில் முஸ்லிம் மக்களே பிழையான உணவு பழக்கத்தை கைக்கொண்டு நோயாளிகளாக மாறுகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு பூராவும் தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வார நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு உதுமாலெப்பை பேசியவை வருமாறு:-
உணவு உற்பத்தியில் மறுமலர்ச்சி, புரட்சி ஆகியன ஏற்படுத்தப்பட வேண்டியது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஆகும். ஆயினும் இம்மறுமலர்ச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்துவது என்பது பாரிய சவால்களை கொண்டிருக்கின்றது. இதனால்தான் இதை ஒரு போராட்டம் என்று துறை சார்ந்த நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். காலத்துக்கு காலம் உணவு உற்பத்தி சம்பந்தமான நிகழ்ச்சி திட்டங்கள் பல முன்பு முன்னெடுக்கப்பட்டு போதிலும் அவை பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கவில்லை. இதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி செயலகம் மூலமாக அறிவூட்டல், விழிப்பூட்டல் பிரசாரங்களை முடுக்கி விட்டு உள்ளார்.
இன்று நாம் எல்லோரும் பிழையான உணவு பழக்கத்தையே கைக்கொண்டு வருகின்றோம். இதனால்தான் இளைய வயதுகளிலேயே நோய்களுக்கு உட்படுபவர்களாக உள்ளோம். குறிப்பாக தொற்றா நோய்களால் பீடிக்கப்படுகின்றோம். எமது உணவில் மர கறிகளை நாம் கிரமமாக சேர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளை குறைத்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை தமிழ், சிங்கள மக்கள் மர கறி உணவுகளை கிரமமாக உட்கொண்டு வருவதுடன் அதிக உடல் உழைப்பிலும் ஈடுபடுகின்றனர் என்பது எனது அவதானம் ஆகும், முஸ்லிம்கள் அதிகம் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்ற அதே நேரம் உடல் உழைப்பில் ஈடுபடுவது குறைவாகவே உள்ளது,. எனவேதான் முஸ்லிம் மக்களை தொற்றா நாய்கள் அதிகம் வாட்டுகின்றன, எனவே கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் உணவு பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும், இது மிக கடினமான காரியம் ஆயினும் எதிர்கால சந்ததியினரின் நலனை கொண்டு அவசியம் இதை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
இன்று நாம் பாதுகாப்பற்ற உணவுகளையே உட்கொள்கின்றோம். இன்னொரு வகையில் சொன்னால் உணவு என்கிற பெயரில் நஞ்சை சாப்பிடுகின்றோம். எமது மூதாதையர்கள் சரியான உணவு பழக்கத்தை கைக்கொண்டனர். இதனால் மிக ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அவர்கள் எமக்கு விட்டு சென்ற பல நன்மைகளை நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். எனவே நாம் இன்று எமது எதிர்கால சந்ததியினர் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. அவர்களுக்கு சரியான உணவு பழக்கத்தை நாம் புகட்ட வேண்டி உள்ளது. இதன் மூலமாகவே சுகதேகிகளை கொண்ட ஆரோக்கியமான சமுதாயத்தையும், நாட்டையும் எதிர்காலத்தில் நாம் கட்டியெழுப்ப முடியும்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வார நிகழ்ச்சி திட்டம் மூலமாக அறிவூட்டல், விழிப்பூட்டல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதால் இவை சமுதாயத்தின் அடிமட்ட மக்களையும் நிச்சயம் சென்றடையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.