‘கிழக்கு மாகாணத்துக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்’

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு, இனி நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெறுமென, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததுடன், இதற்கான சகல விடயங்களையும், இன, மத, மொழி வேறுபாடின்றி முன்னெடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில், இன்று (07) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒரு வருடகாலம் மாத்திரம் தான் ஆளுநராகப் பதவி வகித்துவிட்டு, அடுத்த வருடத்துக்குள், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகக் கூறினார்.

அத்துடன், கிழக்கு மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், பூரண இதய சுத்தியுடன், கிழக்கின் நண்பனாக செயற்படுவதாகவும் உறுதியளித்தார்.

தொண்டராசிரியர்கள், ஆசிரியர் பற்றாக்குறை, சுகாதார ரீதியான பல பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, புதிய செயலணிகளை உருவாக்கி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறினார்.

மேலும், அரச அதிகாரிகளின் ஆதரவும் மக்களது ஆதரவும் தனக்குத் தேவையெனக் கூறிய ஆளுநர், கிழக்கில் இன முரண்பாடுகளற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.