’கிழக்கு மாகாணத்துக்கு 14,010 தடுப்பூசிகள் கிடைத்தன’

கிழக்கு மாகாணத்திலுள்ள 04 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் 258 நிலையங்களுடாக கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும் முதல் முறையாக சுகாதாரத் துறையினர் மிக ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 4,870 தடுப்பூசிகளும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 3,070 தடுப்பூசிகளும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 3,400 தடுப்பூசிகளும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு 2,670 தடுப்பூசிகளுமாக மொத்தம் 14,010 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 46 சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாத் தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தத் தடுப்பூசியினால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அவதானித்து, அதற்கு முகங்கொடுக்கவும் சிகிச்சை நிலையங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு சுகாதார அலுவலக பிராந்தியத்திலிருந்தும் விசேட குழுக்களை ஆரம்பித்து, சிகிச்சை நிலையங்கள் இதற்கான வசதிகளை கொண்டுள்ளதா என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளதாகவும் டொக்டர் ஏ.லதாகரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவாட்டத்தில் கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுமார் 200 பேர் சுகாதாரப் பிரிவுகளில் கடமை புரிவதாகவும் இவர்களில் 40 பேருக்கு, நேற்று முன்தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்கள் தமக்கான கொவிட்19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டார்கள். இந்தத் தடுப்பூசி ஏற்றும் பணிகள், நாளையும் (01) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.