கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளாகிய தமது நம்பிக்கையினை உடைத்தெறிந்ததன் மூலம் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிளுடனான கூட்டினை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “ஒற்றுமையை வலுப்படுத்தி ஆறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தோம். கூட்டுக்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டிருந்தோம். ஆனாலும் தேர்தல் நிறைவடைந்த மறுநாளே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஈபிஆர்எல்எவ் கட்சி மீறியதன் தொடராக ஈபிஆர்எல்எவ் கட்சி தற்போது வரையில் தவறான முடிவுகளை சர்வாதிகாரப் போக்கில் முன்னெடுத்துவருகிறது.

கூடுதல் வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் மேலதிக ஆசனங்களை புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினராகிய நாங்களே பெறுவதற்கான தகுதியினைப் பெற்றவர்களாக இருக்கிறோம்.

ஆனாலும் ஈபிஆர்எல்எவ் தன்னிச்சையாக முடிவெடுத்து மேலதிக ஆசனங்களை தமது விருப்பத்துக்கு ஏற்றவகையில் பங்கீடு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றமை எங்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இதனைக் கண்டும் காணாமல் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆகிய வீ.ஆனந்தசங்கரியின் நடவடிக்கையும் எங்களை விசனம் அடைய வைத்துள்ளது.

தேர்தல் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கவில்லை. இந்த நிலையில் திருகோணமலையில் இருக்கும் நாங்கள் யாழ்ப்பாணம் சென்று சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக முயற்சி செய்திருந்தோம் அதற்கு அவர் இணங்கவில்லை.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக எந்தவித ஆக்கபூர்வமான முனைப்புக்களையும் மேற்கொள்ளாது எங்கள் உழைப்பின் மூலம் பெறப்பட்ட வெற்றியைக் கூட தட்டிப்பறிக்கும் மனோநிலையில் இருக்கும் இவர்களுடன் சேர்ந்த பயணிப்பது என்பது சாத்தியமில்லையென்பதால் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்கிற கூட்டு முயற்சியிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறோம்.”