கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. அந்தவகையில், கேப்பாபுலவிலிருந்து 248 ஏக்கர் காணியும் சீனியாமோட்டையிலிருந்து 31 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய, 5 மில்லியன் ரூபாய் நிதி, எமது மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்படுமிடத்து, 189 ஏக்கர் தனியார் காணிகளும், ஒரு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும். இதன் பிரகாரம், மொத்தமாக 468 ஏக்கர் காணிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.