கையை உடைத்த பாவம் வேண்டாம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்திய பாவத்துக்கு உள்ளாகாமல், அரசியலிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கௌரவமாக விடைபெற வேண்டும் என மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்சக்தி, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த வீரவர்தன, ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒருபோதும் பிளவுபடாது. அதற்கு, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.

அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவும், இந்தக் கட்சியைப் பிளவுபடுத்திவிட்டு மற்றுமொரு கட்சியை உருவாக்க மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர, ஏனையோரின் தேவைக்காக புதிய கட்சியொன்றை மஹிந்த உருவாக்குவாரேயானால், அது சு.க.வை பிளவுபடுத்தியதாகவே அர்த்தப்படுத்திவிடும். மஹிந்த என்பவர், நாம் மதிக்கும் தலைவர்களில் ஒருவர். அதனால், அவரிடம் நாம் கோரிக்கையொன்றை முன்வைக்கிறோம். தயவு செய்து, சு.க.வை பிளவுபடுத்தும் சதியில் சிக்கிவிடாதீர்கள் என நாம் அவரிடம் கோருகின்றோம்’ என்றார்.

‘இன்று இந்தக் கட்சியை பிளவுபடுத்த எண்ணுபவர்கள் எவரும், சு.க.வைச் சேர்ந்தவர்கள் அல்லர். சு.க.வில் தொத்திக்கொண்டு, தங்களது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர்களே அவர்கள். அவர்களின் தேவைக்காகக் கட்சியை உடைக்க ஒருபோதும் இடமளியோம்.

மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து ஓய்வுபெறுவாராயின், இவர்களின் அரசியல் பயணம் சுனாமியில் அகப்பட்டதாகிவிடும். அதனாலேயே, அவர்களின் சுயலாபத்துக்காக மஹிந்தவைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்’ என எதிரிவீர வீரவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.