கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

கியூபா மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக அறியப்படுகிறது. ஆனால் மருத்துவ துறையில் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபா நாட்டில் இருந்து உலகின் எந்த நாடுகளும் மருத்துவ உதவிகளை பெற வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். கியூபாவின் மருத்துவ சிகிச்சை மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தி இருந்தார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கியூபா மறுத்து வருகிறது.

கியூபாவில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1337 ஆக உள்ளது. இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் உலகிலேயே மக்கள்தொகைக்கு அதிக விகிதமுள்ள மருத்துவர்களை கொண்ட நாடாக கியூபா அறியப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசை எதிர்கொள்ளக் கியூபா தயாராகிவிட்டது.

தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், சுகாதார பாதுகாப்புக்கும், சமூகம் சார்ந்த சுகாதார பராமரிப்புக்கும் கியூபா புகழ்பெற்றது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
நாடுகளுடனான நட்பை காக்கும் கியூபா
படத்தின் காப்புரிமை Getty Images

தென் ஆஃப்ரிக்காவில் வெள்ளையர்கள் சிறுபான்மையினரை ஆட்சி செய்தபோது வெள்ளையர்களை எதிர்த்து போராடுவதில் கியூபா முக்கிய பங்கு வகித்தது. 1994ல் நெல்சன் மண்டேலா அதிபராக பொறுப்பேற்கும் வரை வெள்ளையர்களை எதிர்த்து இரு நாடுகளும் இணைத்து நடத்திய போராட்டம் தொடர்ந்தது.

தற்போது கோவிட் 19 வைரஸை எதிர்த்து போராட கியூபா மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தென் ஆஃப்ரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது.