கொலையாளி ஓமர் மட்டீன்: மனைவியை அடிப்பவர்; சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர்

புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாக இனங்காணப்பட்டுள்ள ஓமர் மட்டீன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவரது தந்தை, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் குறித்த நபர் மியாமியில் அண்மையில் இருக்கும் போது, அவர்களுக்கு முன்னர் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அது அவரைக் கோபப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஓமர் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது முன்னாள் மனைவியான சிதோரா யூசுபி, 2009ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் முடித்துச் சில மாதங்களில், அவரிடம் காணப்பட்ட குழப்பமான நிலைமையை இனங்கண்டு கொண்டதாகத் தெரிவித்தார். ‘சில மாதங்களின் பின்னர் அவர், உடல்ரீதியாக என்னைச் சித்திரவதைப் படுத்தினார். எனது குடும்பத்தினருடன் கதைக்க அனுமதிக்கவில்லை, அவர்களிடமிருந்து என்னை விலக்கி வைத்திருந்தார்” எனத் தெரிவித்தார்.

இஸ்லாமிய மதத்தை மட்டீன் பின்பற்றியதாகத் தெரிவித்த அவர், தனது காலத்தில் அவர், தீவிரப் போக்குடையவராகக் காணப்படவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் அவர், மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவித்தார்.

ஒரு கணம் சிரித்து, நகைச்சுவையாகப் பேசும் அவர், மறுகணம் பயங்கரமானவராக மாறுவார் எனத் தெரிவித்த யூசுபி, அவரிடமிருந்து தன்னை, இழுத்தே பெற்றோர் பிரித்ததாகத் தெரிவித்தார்.

இதேவேளை, எப்.பி.ஐ-இனால் பராமரிக்கப்பட்ட பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில், ஓமர் மட்டீன் காணப்பட்டதாகவும், பயங்கரவாதத் தொடர்புகள் குறித்து 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த விசாரணைகளின் முடிவில், அவருக்கெதிராகப் போதிய ஆதாரம் காணப்பட்டிருக்காத நிலையில், அப்பட்டியலிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு நிறுவனமொன்றில் கடந்த 9 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், தெற்கு புளோரிடாவிலுள்ள ஓய்வுபெற்றோர் சமுதாயமொன்றுக்கான ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு அதிகாரியாகக் காணப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தினால் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பின்புலச் சோதனைகளில் – இறுதியாக 2013ஆம் ஆண்டில் – அவர், இப்பணிக்குப் பொருத்தமானவரென அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.