கொல்லவே நினைத்தேன்

மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்’ என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘எந்தவொரு ஜனாதிபதியும் யுத்தம் செய்யவேண்டாம் என்று கூறவில்லை’ என்றார்.

‘இந்த யுத்தத்தில், இடங்களைப் பிடிப்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, பயங்கரவாத அமைப்பில் இருந்தவர்களைக் கொல்லவேண்டும். அவ்வாறு செய்தால் யுத்தம் நிறைவடையும் என்ற சிந்தனையிலேயே யுத்தத்தை முன்னெடுத்தேன்’ என்றும் அவர் கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘பத்து அல்லது 15 ஆண்டுகள் தவறுதலாக அடித்தளம் போட்டால், அதன்பின்னரான பெறுபேறுகளுக்கு மக்களே முகங்கொடுக்க வேண்டும். யுத்தத்தின் வெற்றியை விற்றனர். இதனை, மீண்டும் மீண்டும் நான் சொன்னால், அது முட்டாளின் கதையென்பர்.

பிரான்ஸில் இருக்கின்ற அதிவேக நெடுஞ்சாலையே மிகவும் பிரசித்தமானது. அந்த நெடுஞ்சாலையின் கிலோமீற்றர் ஒன்றை நிர்மாணிப்பதற்கு, 4 மில்லியன் டொலர்கள் செலவாகின. எனினும், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கிலோமீற்றர் ஒன்றை நிர்மாணிப்பதற்கு 14 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, 6 ஒழுங்கைகளைக் கொண்டதாகவே நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டு, கடனும் பெறப்பட்டது. எனினும், நான்கு ஒழுங்கைகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏனைய ஒழுங்கைகளுக்கான பணத்தை, மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் விழுங்கிவிட்டது. இதுவோர் அருமை புதுமையான நெடுஞ்சாலையாகும். ஏனெனில், போகும், வரும் ஒழுங்கைகளுக்கு இடையில், 3 அடி தூரத்தில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரும்பு வேலியால், உயிருக்கும் வாகனத்துக்கும் எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தீ வைக்கும் மத்திய நிலையங்கள் மூன்றை நிறுவுவதற்கு, தென்கொரியாவிடமிருந்து 33 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டது. அதனையும் அக்குடும்பம் விழுங்கிவிட்டது. இவ்வாறு பெறப்பட்ட சின்னச் சின்னக் கடன்கள் பலவற்றை விழுங்கியே விட்டனர்.

யுத்தத்தில் காயமடைந்தவர்களை ஏற்றியிறக்குவதற்காக, 68 இருக்கைகள் கொண்ட விமானத்தை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யுமாறு கோரினேன். அதற்குப் பணமில்லை என்ற முப்படைகளின் தளபதியான மஹிந்த ராஜபக்ஷவும்
பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும், தாங்கள் சொகுசாகப் பயணிப்பதற்கு இரண்டு விமானங்களையும் 14 ஹெலிகளையும் கொள்வனவு செய்தனர். இவை யாவும், யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் கடந்ததன் பின்னரே இடம்பெற்றன.

ஒட்டுண்ணி குமாரவான நாமல் ராஜபக்ஷ, விமானப் பணிப்பெண்ணொருவரை பணியாளராக அமர்த்திக் கொண்டிருந்தார். அப்பெண், விமானத்தில் இருப்பதில்லை, வீட்டில்தான் இருந்தார். அவருக்கு, மாதாந்த சம்பளமாக 42 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

‘அபி வெனுவென் அபி’ என்ற அமைப்புக்காக 4.5 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டது. எனினும், தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 300 வீடுகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டன. ஏனைய நிதிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை’ என்றும் அவர் கூறினார்.

சுதந்திர தினத்தோடு நடத்தப்பட்டதே, தயட்ட கிருள (தேசத்துக்கு மகுடம்). என்னைப் பொறுத்தவரையில், அது தயட்ட கரும (தேசத்தின் தலைவிதி). அதற்காக, ஒவ்வொரு முறையும் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

அந்த தெயட்ட கரும நடத்தப்பட்ட எந்தவோர் இடத்திலும் வாழை மரம் ஒன்றேனும் முளைக்கவில்லை. அநுராபுரத்தில் நாட்டிய மின் கம்பங்களைக் கழற்றி வந்து, குருநாகலில் நாட்டினர்;. அங்கிருந்து கழற்றிச் சென்று, வேறோர் இடத்தில் நாட்டினர். அதற்கிடையில், அந்தந்தப் பிரதேசங்களில் புதையல்களைத்; தோண்டினர்.

துறைமுக நகரத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், 200 ஹெக்டேயரில் 20 ஏக்கர் சீனாவுக்கு வழங்கப்பட்டது. அதனுள், எம்மால் எதனையுமே செய்யமுடியாது. ஏன், இந்தத் திட்டத்துக்கு மேலான வான்பரப்பில், எங்களுடைய விமானங்கள் கூடப் பறக்க முடியாது.

உலகநாடுகள் பலவற்றில் யுத்தங்கள் இடம்பெற்றன. அந்த யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர், அதன் கௌவரத்தை அந்நாட்டு ஆட்சியாளனோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ பெற்றுக்கொள்வதற்கு முயலவில்லை. துப்பாக்கிச் சன்னத்துக்கு நெஞ்சைக் கொடுத்தவருக்கே கௌரவம் கொடுத்தனர். ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில், மண்டைத்தீவை நானே கைப்பற்றினேன் என்று, கோட்டாபய கூறித்திரிகின்றார். அன்று, நானும் 350 பேர் அடங்கிய என்னுடைய படையணியும் இருந்திருக்காவிடின், படையில் பல உயிர்களை இழந்திருப்போம்.

என்னுடைய படையின் முயற்சியால், புலிகளின் 60 சடலங்களையும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எம்மால் மீட்கமுடிந்தது. கோட்டாபயவைப் பொறுத்தவரையில், அடுத்தவனின் வெற்றிக்கு பெயர்போட்டுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்.

இந்தமுறை யுத்தத்தில், கடந்த காலங்களைப் போல, நிலங்களைப் பிடிப்பதற்கு நாங்கள் முயலவில்லை. அவ்வமைப்பில் 35 ஆயிரம் பேரே இருந்தனர். அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் யுத்தம் நிறைவுக்கு வரும் என்று நினைத்தேன்.

„ஓர் அங்குல நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்கமாட்டேன்… என்று பிரபாகரன் கூறியமையால், எப்படியாவது எங்களை நோக்கி பயங்கரவாதிகள் வருவர் என்று எங்களுக்குத் தெரியும். வர வரத் தாக்கினோம். நாளொன்றுக்கு 14 அல்லது 15 பயங்கரவாதிகளைக் கொன்றோம். எங்களில், நான்கைந்து இராணுவத்தினரை இழந்தோம்.

யுத்தத்தை, ஐந்து படையணிகளை வைத்து, ஐந்து இடங்களிலிருந்து நகர்த்தினேன். கொஞ்சம் நாட்கள் செல்லச்செல்ல, யுத்தத்துக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின. வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு நேரடியாகச் சென்றால் என்ன என்று, கடற்படைத்தளபதி என்னிடம் கேட்டார். இது அவருடைய திட்டமல்ல என்பதை அப்போதே தெரிந்துகொண்டேன். முல்லைத்தீவுக்கு ஹெலியில் சென்று குண்டுகளை பொழிந்திருக்கலாம். ஆனால், திரும்பி வந்திருக்க முடியாது. என்னுடைய நோக்கத்தைப் போலவே, நந்திக்கடலில் யுத்தம் நிறைவடைந்தது.

தன்னைக் கொலை செய்யவந்தவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். இவ்வாறான நிலையில், இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டுமாயின். என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியை அழைத்துவந்த மொரிஸுக்கும், ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்க வேண்டும்

மொரிஸ், ஏழு வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார். என்னுடன் சிறைச்சாலையில் இருந்தார். ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்து, இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம்.

‘முழு இராணுவமுமே குற்றம் செய்யவில்லை. யாராவது செய்திருந்தால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதில் தப்பில்லை.

யுத்தத்தில், 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பொய்யாகும். இறுதி யுத்தம் இடம்பெற்ற கடைசி இரண்டொரு நாட்களில் 45 ஆயிரம் பேர் பலியாகியிருந்தால், அப்பகுதியில் உள்ள காணிகளை மண்வெட்டியால் கொத்தினால் மனித எலும்புகளே அகப்படும். யுத்தத்தின் இறுதிக்கட்ட நகர்வை, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்திலிருந்து நான் அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை, புதுமாத்தளன் பகுதியில், புலிகள் சுமார் 900 பேரைப் புதைத்தனர். அவர்களுடைய புலிக்கொடியைப் போர்த்தி மரியாதை செலுத்தியே, அச்சடலங்களை அடக்கம் செய்தனர்’ என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

‘புதுக்குடியிருப்பு நோக்கி நகரப் போகின்றோம். ஆகையால் அப்பகுதியில் இருக்கும் மக்களை அகன்று செல்லுமாறு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டுத்தான், புதுக்குடியிருப்பை நோக்கி நகர்ந்தோம். எனினும், எம்மால் வீசப்பட்ட ஏவுகணையொன்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில், தவறுதலாக விழுந்துவிட்டது. யுத்தத்தின் போது காயமடைந்த பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினர் சிகிச்சையளித்துள்ளனர்.

பயங்கரவாதிகளில் 23,000 பேர் மரணித்துவிட்டனர். 12,000 பேரை உயிருடன் பிடித்தோம்’ எனக் கூறினார்.
‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும் கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், இந்தியாவில் மறைந்திருக்க முடியாது.ஏனெனில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில், இந்தியாவினால் தேடப்படும் முக்கிய புள்ளியாவார். அதாவது, நந்திக்கடலுக்கு, வடகிழக்கின் ஊடாக 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று, பொட்டு அம்மானும் பிரபாகரனும் தப்பிச்செல்ல முயன்றனர் என்று அவ்வமைப்பில் இருந்த கே.பி தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் திரும்பிவந்துவிட்டார், பொட்டு அம்மான் திரும்பவில்லை. பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், கொழும்பில் கே.பி தங்கியிருந்த வீட்டிலேயே அவரையும் தங்கவைத்திருப்பர்’ என்றார்.

‘2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் பிரபாகரனை வடக்கு – கிழக்குக்கு முதலமைச்சராக ஆக்கியிருப்பர். இராணுவத்தின் இரண்டாம் நிலையிலிருந்த லெப்டினன் ஜெனரல் பாரமி குலத்துங்க மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு நான் பொறுப்புக் கூறவேண்டும் என்பதில் எவ்விதமான நியாயமும் இல்லை.

அவர் மீது தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டபோது நான், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன்’ என்றார்.