கோமி விவகாரம்: கருத்து முரண்பாடுகள் தொடர்கின்றன

ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் கோமியை, அப்பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பாக, மாறுபட்ட கருத்துகள், தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டுள்ளன. அவரைப் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ், ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக் ஆகியோரைச் சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பணிப்பாளர் கோமியை நீக்கியமை தொடர்பாக அவர்களோடு கலந்துரையாடியதாகவும், அதன்போது கோமியை, “கிறுக்கர்” என்று வர்ணித்ததாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்கியமையால், “அழுத்தம் நீங்கும்” எனத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தச் செய்தியை மறுக்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மக்மஸ்டர், ரஷ்யா தொடர்பான செய்தி, ஊடகங்களில் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாகக் காணப்பட்டதாகவும், அதையே ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன், உள்நாட்டில் நடைபெறும் பிரச்சினைகள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவைப் பாதிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தவே, ஜனாதிபதி அவ்வாறு கூறினார் எனத் தெரிவித்தார்.

எனவே, ஜேம்ஸ் கோமியை, “கிறுக்கர்” என ஜனாதிபதி ட்ரம்ப் வர்ணித்ததாக வெளியான செய்தியை, இவர்களிருவரும் மறுக்கவில்லை.

ஆனால் மறுபக்கமாக, ரஷ்ய வெளிநாட்டமைச்சரும் தூதுவரும், ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சந்தித்த போது, பதவி விலக்கப்பட்ட எப்.பி.ஐ பணிப்பாளர் கோமி பற்றிய கலந்துரையாடல் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என, ரஷ்ய வெளிநாட்டமைச்சர் மறுத்துள்ளார். எனவே, இது தொடர்பான சர்ச்சை, தொடர்ந்தும் நீடிக்கிறது.