க்வாதாரில் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்தது

இந்த பிராந்தியத்திற்கான மின்சார விநியோகம் ஈரானில் இருந்து வருகிறது. ஈரான் கோடைக்காலத்தில் மின்சார விநியோகத்தைக் குறைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதியான கடலோர நகரமான க்வாதாரில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  எல்லா அரசியல் கட்சிகள், மீனவர்கள், சமூக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் நகரின் மையப்பகுதியில் கூடி வீதிகளை வழிமறித்தும்  டயர்களை போட்டு எரித்தும்  அரசுக்கெதிரான தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.

எதிர்ப்பாளர்களால் ஓகஸ்ட்  17ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும் மாவட்ட நிர்வாகம் அதை எதிர்த்து முரட்டுக் கரங்களால் தடுக்க முயன்றது. இதன் காரணமாக எதிர்ப்பாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் காயமடைந்தனர்.

முதலமைச்சர் ஜாம் கமாலும் மற்றும் சில அரசாங்க அதிகாரிகளும் பின்னர் சம்பவ இடத்துக்குச்சென்று அங்குள்ள உள்ளுர் மக்களின் துன்ப துயரங்களை கேட்டறிந்தனர்.

க்வாதாரில் எங்களுக்கு ஒன்பதுக்கும் பத்துக்கும் இடையிலான மணித்தியால மின்சார விநியோகமே இந்த உச்ச கோடைக்காலத்தில் கிடைக்கிறது. இது மக்களுக்கு மிகுந்த வசதியின்மையை ஏற்படுத்துகிறது என்று கிராம சபை அபிவிருத்திக் குழு தலைவர் நாஸிர் சோஹ்ராபி கூறினார். போராட்டத்திற்கு இன்னொரு பிரதான காரணம் சட்டவிரோதமாக படகுகளில் வந்து மீன்பிடித்தல். மீன்பிடியை நம்பி வாழும் சமூகம் இதனை பல வருடங்களாக எதிர்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மீன்பிடி படகுகள் சிந்துவிலிருந்து வந்து க்வாதாருக்கு அருகில் மீன் பிடித்து வருவதோடு அவர்கள் முரண்பாடான நிலையில் மீன் பிடிக்கின்றனர்.  கடல் வளத்தை நாசம் செய்யும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இதனால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகின்றது என்று சோஹ்ராபி கூறினார். அண்மையில் 5 சீன மீன்பிடி படகுகள் க்வாதார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததானது, மக்களின்  கோபத்தை அதிகப்படுத்தி எதிர்ப்புகளையும் தூண்டியது. எனினும் அவர்களுக்கு இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லாததால் அந்தப் படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக சோஹ்ராபி    தெரிவித்தார்.

தற்பொழுது சசெக்ஸ்  பல்கலைக்கழகத்தில் அறிஞராக இருக்கும் பெண் எழுத்தாளரான மர்யம் சுலேமான் இதுபற்றிக் கூறுகையில், தண்ணீர், மின்சாரம் மற்றும் சட்டவிரோத மீன்பிடி என்பன புதிய விடயமல்ல. இம்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபம் மட்டுமே புதியது என்று கூறினார்.

க்வாதாரின் சில பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் நடைபெற்றுள்ளன. ஆனால் அதன் அண்டைய பகுதிகளில் வாழும்  சொந்த ஊர் மக்களுக்கு எந்தவித அபிவிருத்தியும் இல்லாததே அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அவர் மேலும் கூறுகையில் உள்ளூர் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

ஆனாலும் தற்பொழுது அவர்கள் வருத்தப்படுவது ஏனென்றால் பிற பகுதியினர் வந்து அங்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் தங்களுடைய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்கள் என்று கூறினார்.

க்வாதாரில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டம் பிரபல்யமானதற்குக் காரணம் என்னவென்றால் மக்கள்மீது  அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு இது ஒன்றே வழி என்பதாலாகும்.

க்வாதாரில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பெருந்தொகையான மேற்குலகப் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது. சீனாவின் ஆங்கில மொழி வெளியீடான குளோபல் டைம்ஸ் இந்த நிகழ்வை பாகிஸ்தானின் வீதி மற்றும் பட்டுப்பாதை திட்டத்துக்கு எதிரான அவதூறு பிரசாரம் என்று குறிப்பிட்டது.

எதிர்ப்புகளை தூண்டும் க்வாதார் பிரச்சினைகளுடன் சீனாவுக்கு எந்த தொடர்பும் இல்லையென்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

சோஹ்ராபி  இது பற்றி தெரிவிக்கையில், மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை புரிந்துகொள்ளவேண்டும். 2002ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் க்வாதார் துறைமுகம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் துபாய் சிங்கப்பூர் போன்று ஒரு பெரிய நகரமாக மாறும் என்றும் கூறினார்கள்.

ஆனால் அரசாங்கம் இவ்வாறு கூறிய போதிலும் நடைமுறையில் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதுவே இந்த மக்களின் கோபத்துக்கு காரணம் என்று கூறினார்.

எழுத்தாளர் சுலேமான் கூறுகையில், க்வாதார் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள்  அல்ல.  ஆனால் இந்த செயல்பாட்டில் அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதையே அவர்கள் எதிர்க்கின்றனர் என்று கூறினார்.

ஆதலால் , இங்குள்ள மக்களின் குறைபாடுகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Leave a Reply