’சமல் மட்டுமே தகுதியானவர்’

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மாத்திரமே இருப்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சமல் ராஜபக்ஷவைக் களமிறக்க வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கோரியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுபவர் மாத்திரமே, ஜனாதிபதியாக முடியுமென்றும், டிலான் எம்.பி குறிப்பிட்டார்.

இதனைக் கருத்திற்கொண்டே, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார, ஒன்றிணைந்த எதிரணியின் சார்ப்பில், சமல் ராஜபக்ஷவை களமிறக்க வேண்டுமெனக் கோரியிருந்தாரென்றுத் தெரிவித்த டிலான் பெரேரா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வீழ்த்துவதற்கு, ஐ.தே.கவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து, பலமான ​எதிரணி ஒன்றை உருவாக்க வேண்டுமென்றும் அவர் கோரினார்.