சம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!

தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப் படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவானது எதிர்வரும் புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் சட்டத்தரணியிமான லால் விஜேயநாயக்க தெரிவித்தார். தற்போதுவரை பொதுமக்களிடமிருந்து 3000ற்கும் மேற்ப்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி உட்பட பிரதமருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு 02ல் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான கருத்துகளை உள்வாங்கும் குழுவினரின் தற்போதய செயற்பாடுகள் தொடர்பில் குழுவின் தலைவரும் சட்டத்தரணியிமான லால் விஜேயதுங்க தெரிவித்துள்ளதாவது, தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் ஆயுட்காலமானது இம்மாதம் 31ம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இதுவரை பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் 3000ற்கும் மேற்பட்டதாக காணப்படுகின்றன.

அந்தவகையில் எமது குழுவானது அரசியலமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா. சம்பந்தனை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் வைத்து சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பின் போது எமது குழுவுக்கு தற்போது வரை கிடைத்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலும் பேசப்படும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகளை உள்வாங்கும் எமது அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது.

அந்தவகையில் எமது குழுவினர் நாடளாவிய ரீதியில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து கணிப்புகளை பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் மாதமளவில் இது தொடர்பிலான அறிக்கையினை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.