சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமணம்?

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று, வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.

“இத்தகைய கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் முடியும். கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் பொழுது பிறக்கின்ற பிள்ளைகள் ஒரே சாதியில், ஒரே இனத்தில் பிறக்கின்ற பிள்ளைகளைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள். கலப்புத் திருமணம் என்பது கூடாதது அல்ல. கலத்தல் என்பது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விளைவுகளின்படி நன்மைகளைத் தரவல்லது. இலங்கையின் முன்னோர்களான அரசர்களும்கூட கலப்பு திருமணங்களையே செய்திருந்தனர். தனித்துவமான இனம் என்று எதனையும் கூறமுடியாது.

இலங்கையை ஆண்ட அரசர்களில் அநேகர் இந்தியாவில் இருந்தே தமது மனைவியரை வரவழைத்திருந்தனர். எனவே சிங்கள இரத்தம் என்பது கலப்படம் கொண்டது. இங்கு வந்த முஸ்லிம்கள் அனைவரும் சிங்களப் பெண்களையே திருமணம் செய்து கொண்டார்கள். எனவே, நாங்கள் தனித்துவத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. எல்லோருமே கலப்பினத்தவர்களே. இங்கு வந்துள்ள நானும்கூட கலப்பு மனிதனே” என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கின் புதிய ஆளுனரின் இந்தக் கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்

நேற்றுமாலை யாழ். மத்திய கல்லூரியில் நடந்த ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆளுனரின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றினார். “நாங்கள் கலப்பு திருமணத்திற்கு எதிரான மனப்பாங்கு உள்ளவர்கள் கிடையாது. என்னுடைய பிள்ளைகள் சிங்கள இனத்தவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இங்கே அவ்வாறில்லை. வட,கிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்ற கிடைக்க வேண்டிய அவர்களுடைய உரித்துக்களை, உரிமைகளை வழங்குங்கள். அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திருமணங்களைக் குறித்து பேசிக் கொள்ளலாம்,பார்த்துக் கொள்ளலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்