சர்வதேச விசாரணை தொடர்பில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை அதன் பின்னர் அந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு என்பன தொடர்பில் சரியான நிலைப்பாடொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டுமென அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ..

ஏற்கனவே இந்த தீர்மானங்கள் தொடர்பில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பில் மக்கள் நலன்சார் முடிவொன்றை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களைப் போல் அல்லாது மனித உரிமைகள் ஆணையாளரினால் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையினை இராஜதந்திர ரீதியில் எவ்வாறு அணுகுவது ,இதனூடாக விசாரணைகள் இன்றி சிறைகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களை எப்படி விடுவிப்பது, காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறைகள்,இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் காணிகளை எப்படி விடுவிப்பது, போரினால் பாதிக்கப்பட்டு இன்னமும் அவதியுடன் வாழும் மக்களுக்கு புனருத்தானங்களை எப்படி பெற்றுக் கொடுப்பது,ளுஅரசியல் தீர்வினை எப்படி பெற்றுக்கொள்வது என்பனவற்றை அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தினையே எமது தலைவரின் அறிக்கை வலியுறுத்தி இருந்தது.

இது தொடர்பில் எந்தவித சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தாதது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பல பரிந்துரைகளை நீர்ப்படையச் செய்த, உள்ளக விசாரணையை கூடுதலாக வலியுறுத்திய அமெரிக்க பிரேரணை வரைவு வரவேற்கப்பட வேண்டியதெனவும், தமக்கு அது திருப்தி அளிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் ஒருமித்த முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டதா? என்கின்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மத்தியில் இது பெரும் குழப்ப நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் முற்றுமுழுதாக சர்வதேச விசாரணை ஒன்றையே மக்கள் விரும்புகிறார்கள் என சிறிதரனும், சித்தார்த்தனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் சர்வதேச விசாரணை ஒன்றே வேண்டுமென பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளக விசாரணை ஒன்றே நடாத்தப்படும் எனவும், இதனையே அமெரிக்க வரைவு தீர்மானம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

மிக முக்கியமான இந்த உரையினை பிரதம மந்திரி நாடாளுமன்றத்தில் முன்னறிவித்தல் கொடுத்து ஆற்றியபோது எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருக்கும் சம்பந்தர் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் இருந்தது மட்டுமல்ல, அவர் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வடகிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, விசாரணையின்றி சிறைகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்போம், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவோம், இன்னமும் படையினர் வசமிருக்கும் காணிகளை மீட்டுத்தருவோம், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்போம் எனக் கூறியே மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

ஆனால் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்றைய ஆளும் அரசில்; அங்கம் வகித்துக் கொண்டிருந்தும், இந்த விடயங்கள் தொடர்பில் எந்த முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாதது மட்டுமல்ல, ஜெனீவா தீர்மானம் தொடர்பிலும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவது மக்களை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

முன்னைய காலங்களைப்போல இவர்கள் அளித்த இந்த தேர்தல் வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்படுமா? என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்போது எழுகிறது.

ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? என்பது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்துக்கள் எழுந்திருந்தன.

இது தொடர்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் அவர்களாலேயே முன்மொழியப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வன்னிப்போரில் இடம்பெற்றது இனப் படுகொலையே எனத் தெரிவிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இன அழிப்பு நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தது.

இடம்பெற்றது இன அழிப்பா? அல்லது போர்க்குற்றமா? என்பதிலேயே மக்களை குழப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் தற்போது சர்வதேச விசாரணையா? அல்லது உள்ளக விசாரணையா? என்பதிலும் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு மக்களை மேலும் மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

எமது தலைவர் அடிக்கடி கூறுவது போல கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பாழடிக்கப்பட்டமையே வன்னி போரின் அனர்த்தங்களுக்கும், மக்கள் அழிவுக்கும் காரணமாகின என்பது போல, தற்போதைய இந்த சந்தர்ப்பமும் கூடுதலான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருமித்து அணுகப்படாவிட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டாக் கனியாக போய்விடுமோ எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்- என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.V K Jegan Velummailum