சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது

ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், புதன்கிழமை (06) மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார்.

முன்னர் பொது பல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இந்தப் புதிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் பூசல்களைத் தமது இயக்கத்தினுள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவ்வியக்கம் இதன்போது அறிவித்தது. நுகேகொடையில் முஸ்லிம்கள் சிலரின் வீட்டுச் சுவர்களில் ‘சிங்க லே’ எனும் சொல் எழுதப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.