சிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படை தளத்தை குறிவைத்து அமெரிக்க கடற்படை நேற்றுமுன்தினம் 59 டோமாஹாக் ஏவுகணைகளை வீசியது. இதில் அல்-சாய்ரத் விமான தளம் கடுமையாக சேதமடைந்தது. 6 வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியதாவது: சிரிய ராணுவம் ரசாயன வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். அதற்கு பதிலடி கொடுக்கவே சிரியாவின் விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியா ராணுவம் மீண்டும் ரசாயன வாயு குண்டுகளை வீசினால் அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐ.நா.வுக்கான ரஷ்ய துணைத் தூதர் விளாடிமிர் சப்ரோன்கோவ் பேசியதாவது: சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா வன்மையாகக் கண்டிக்கிறது. இது சர்வதேச விதிமீறல். ஐ.நா. சபையின் ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில்கூட அனுமதி பெறப்படவில்லை. மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் கூறியபோது, சிரியா மீது புதிதாக பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் தடைகள் அமல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மோதல் வலுக்கிறது

ரஷ்ய ராணுவ தலைமை யகத்துக்கும் அமெரிக்க ராணுவ தலைமையகத்துக்கும் இடையே ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு உள்ளது. அந்த இணைப்பை ரஷ்யா நேற்று துண்டித்துவிட்டது.

மேலும் ரஷ்யாவின் அதி நவீன போர் கப்பல்கள் சிரியா கடல் எல்லையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. சிரியாவின் வான் பாதுகாப்பையும் ரஷ்ய ராணுவம் அதிகரித்துள்ளது.

இதனிடையே சிரியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்க அதிபர் மாளிகை முன்பு நேற்றுமுன்தினம் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதேபோல அந்த நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.