இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக, எதிரணியுடன் சிரிய அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர், நேற்று (27) தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் பற்றி தமக்கேதும் தெரியாது எனத் தெரிவித்துள்ள சவூதியினால் ஆதரவளிக்கப்படும் எதிரணிக் குழு, ஆனால், யுத்தநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நேர்காணலொன்றிலேயே மேற்படி தகவல்களை ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் வெளிப்படுத்தியிருந்தபோதும், எங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன, எந்த எதிரணிக் குழுக்கள் பங்கேற்றிருந்தன என்பது தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ தலைநகரில் சந்தித்த ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தன.
இந்தப் புதிய பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளில், ஐக்கிய அமெரிக்கா உள்ளடக்கப்படாது என்பதோடு, ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளுக்கு மேலதிகமாகவே புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய பேச்சுவார்த்தைகள், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான கஸக்ஸ்தானில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்ற ரஷ்ய அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் தரப்புகளுக்கான அழைப்பு இன்னும் அனுப்பப்படவில்லையென்றும், எப்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லையென்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ, ஜனவரி மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.