சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா

சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு சிரிய அரச எதிர்ப்பு கூட்டணியின் தலைமை பேச்சுவார்த்தயாளர் முஹமது அல்லவுஷ் இராஜினாமா செய்துள்ளார். பேச்சுவார்த்தைகள் அரசியல் உடன்பாடொன்றையோ அல்லது சிரியாவின் முற்றுகைப் பகுதிகளில் தளர்வையோ ஏற்படுத்த தவறிவிட்டதாக உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவரான அல்லவுஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை குழு சிரிய அரசுடன் ஐ.நா. மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை அண்மையில் இடைநிறுத்தியது. இரு தரப்புக்கும் இடையில் ஜெனீவாவில் ஏப்ரல் மாதம் இழுபறியுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

“அரச தரப்பின் பிடிவாதம் மற்றும் அது தொடர்ந்தும் சிரிய மக்கள் மீது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை நடத்தும் நிலையில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை” என்று அல்லவுஷ் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா பேச்சுவார்த்தையின் மந்த நிலை குறித்து சவூதி அரேபிய ஆதரவு உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழு கடந்த பல மாதங்களாக அதிருப்தி வெளியிட்டு வந்தது.

சிரியாவின் முற்றுகை பகுதிகளுக்கு போதிய மனிதாபிமான உதவிகள் கிடைக்காதது, அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மந்த நிலை மற்றும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இன்றி சிரியாவில் ஆட்சி மாற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தோல்வி ஏற்பட்டது குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழு தனது கோபத்தை வெளியிட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தம் ஒன்று சிரியாவில் தொடர்ந்து அமுலில் இருந்தபோதும் அது அடிக்கடி மீறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அல்லவுஷின் இராஜினாமா அமைதி முயற்சியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் ஊடகம் ஒன்றுக்கு அறிவித்த தகவலில் தாமும் பதவி விலகப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அஸாத் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டமாக ஆரம்பித்த சிரிய சிவில் யுத்தத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 11 மில்லியன் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளனர்.