இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் இடைநிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து அதனைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், இந்த திட்டத்தின் மூல உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்வது குறித்துப் பேச்சு நடத்த, சிறிலங்காவின் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க ஆகியோர் சீனா சென்றுள்ளனர். இந்த நிலையிலேயே, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் போன்று இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா கேட்டுக் கொண்டால் மாத்திரமே, அத்தகைய 28 நகரங்களை நிர்மாணிக்க சீனா இணங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.