சோசலிச கட்சியினர் மூவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி, புஞ்சி பொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், திணைக்களத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட குறித்த மூவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 31 ஆம் திகதி, குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டு நிரூபணமானதைத் தொடர்ந்து, முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.