டைல்கள் மற்றும் செரமிக் பொருட்கள் இறக்குமதிக்கு மீண்டும் தடை

டைல்கள் மற்றும் செரமிக் தயாரிப்புகளின் இறக்குமதி மீதான தடையை தளர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக HS குறியீடுகளைக் கொண்ட 69.05, 69.06, 69.07, 69.10, 69.11, 69.12, 69.13 மற்றும் 69.14 போன்றவை இறக்குமதி செய்யப்படலாம் எனவும், 180 நாட்கள் கடன் வசதியின் பிரகாரம் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2213/8 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யுமாறு சகல வங்கிகளுக்கும் சுங்கத் திணைக்களத்துக்கும் புதிய அறிவித்தலை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் வழங்கியுள்ளது.

சந்தையில் டைல்கள் மற்றும் செரமிக் தயாரிப்புகளுக்கு பெருமளவு தட்டுப்பாடு நிலவுவதுடன், உள்நாட்டு உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. மேலும், நிர்மாணத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நிர்மாணப் பணிகளில் முக்கிய அங்கமாகத் திகழும் டைல்கள் மற்றும் செரமிக் தயாரிப்புகள் மீதான விலை அதிகரித்துக் காணப்படுவது நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக் கடன்கள் மற்றும் புனரமைப்பு கடன்களை சகாய வட்டி வீதத்தில் வழங்கிய போதிலும், நிர்மாணத்துக்கு பயன்படுத்தப்படும் சகல பொருட்களும் (கம்பிகள் அடங்கலாக) விலை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.