‘ட்ரம்ப்புடனான சந்திப்பின் பதிவை வழங்க தயார்’ – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ரஷ்ய வெளிநாட்டமைச்சர், ரஷ்யத் தூதுவர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இரகசியத் தகவல்கள் எவையும் பரிமாறப்பட்டிருக்கவில்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, அதியுயர் இரகசியத் தகவலை, ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்தார் எனச் சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, நேற்றுக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி புட்டின், குறித்த சம்பவம் தொடர்பாக நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

“அவருடன் (தூதுவர் லவ்ரோவ்) நேற்று நான் கதைத்தேன். இந்த இரகசியங்களை அவர் எங்களுடன் பகிரவில்லை என்பதால், அவருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். என்னிடம் இல்லை, ரஷ்யாவின் புலனாய்வுச் சேவைகளின் பிரதிநிதிகளுடன் இல்லை. அது, மிகவும் மோசமானது” என்று, கேலியாகக் கூறினார்.

பின்னர் உண்மையாகப் பதிலளித்த ஜனாதிபதி புட்டின், காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின், இந்தச் சந்திப்பின் பதிவை வழங்குவதற்குத் தயார் என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்குள், சந்திப்புக்காகச் சென்ற அமைச்சரும் தூதுவரும், அந்தச் சந்திப்பை ஒலிப்பதிவு செய்தார்கள் எனக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஐ.அமெரிக்காவில் காணப்படும் “அரசியல் பித்து” நிலையின் சமிக்ஞைகளே இவை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான “மோசமான கருத்துகளை” வேறு என்ன காரணத்துக்காகச் செய்கிறார்கள் என விளங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதியுயர் இரகசியத் தகவல்களை, இஸ்‌ரேலே வழங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, குறித்த இரகசியத் தகவலை, இஸ்‌ரேலே வழங்கியதாக, ஐ.அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள், உறுதிப்படுத்தியுள்ளனர்.