ட்ரம்ப்பை தெரிவுசெய்வதே ரஷ்யாவின் நோக்கம்

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டமை, அடுத்த ஜனாதிபதியாகவே டொனால்ட் ட்ரம்ப்பைத் தெரிவுசெய்வதற்காகவே ஆகும் என, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு நிபுணர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க தேர்தல் முறைமையில் நம்பிக்கையை இழக்கச் செய்வதற்காகவே ரஷ்யா தலையிடுகிறது என ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தத் தேர்தலில், ரஷ்யாவின் பங்கு தொடர்பாக ஆராய்ந்து வந்த மத்திய புலனாய்வு முகவராண்மை (சி.ஐ.ஏ), ரஷ்யா தொடர்பான தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படியே, தேர்தல் முறைமையில் நம்பிக்கை இழக்க வைப்பதற்காக மாத்திரமன்றி, வேட்பாளர் ஒருவருக்கு அனுகூலத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில், ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். எனினும், தங்களது முடிவு, அரசியல் சார்பானது எனக் கருதப்படலாம் என அஞ்சும் அவர்கள், அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்தவில்லை. அந்த விடயங்களையே, அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகைகளான வொஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ் ஆகியன வெளியிட்டுள்ளன.

இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் பிரசாரக் குழுத் தலைவர் ஜோன் பொடெஸ்டோவின் மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்டு, அவை, விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அதேபோல், ஜனநாயகக் கட்சியின் தேசிய செயற்குழுவின் மின்னஞ்சல்களும் இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டன. இவை, ஹிலாரியின் பிரசாரத்துக்கு, அவமானகரமானவையாக அமைந்தன.

இந்த விடயத்தில், புலனாய்வு அமைப்புகளின் மெதுவான நடவடிக்கையே, இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் பங்கு குறித்து முழுமையான அறிக்கையொன்றை, தான் பதவி விலகுவதற்கு முன்பதாகச் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டமைக்கும் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தேசிய செயற்குழுவின் மின்னஞ்சல்களையும், ரஷ்யாவைச் சேர்ந்த ஹக்கர்கள் கைப்பற்றிய போதிலும், அவற்றை வெளியிடாது, தமக்குள்ளேயு வைத்துக் கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், புலனாய்வுப் பிரிவினரின் இந்த அறிக்கையை, டொனால்ட் ட்ரம்ப்பின் குழு நிராகரித்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுஸைனிடம் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் காணப்படுகின்றன என, புலனாய்வு அமைப்புகள் தவறாகத் தெரிவித்தமையை ஞாபகப்படுத்திய அந்தக் குழுவின் அறிக்கையொன்று, “இதே நபர்கள் தான், சதாம் ஹுஸைனிடம் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் பிரதிநிதிகள் குழு அடிப்படையிலான வெற்றியோடு, இந்தத் தேர்தல் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டன. தற்போது அதிலிருந்து விலகி, அமெரிக்காவை மீண்டும் அதிசிறந்ததாக்க வேண்டும்” எனத் தெரிவித்தது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஏனைய தலைவர்கள் சிலரும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

ட்ரம்ப்பின் குழுவின் இந்த நிராகரிப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் காலத்தில் தேசிய பாதுகாப்பு முகராவண்மையின் பணிப்பாளராகவும் பின்னர் சி.ஐ.ஏ-இன் பணிப்பாளராகவும் பணியாற்றிய மைக்கல் வி ஹைடன், “தனது முன்னைய கருத்துகளுடன் வேறுபடுகிறது என்பதற்காக, புலனாய்வுக் குழுக்களின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடொன்றை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி நிராகரிப்பதென்பது – வியப்பைத் தருகிறது” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் தலையிட்ட குற்றச்சாட்டை, ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வந்ததோடு, விக்கிலீக்ஸ் இணையத்தளமும், ரஷ்யாவிடமிருந்து தங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்த மறுத்திருந்தது.

ஆனால், ரஷ்யாவிமிருந்து தான் தங்களுக்கான உதவிகள் கிடைத்தன என்ற குற்றச்சாட்டை ஏற்பது போல, விக்கிலீக்ஸ் வெளியிட்ட டுவீட் ஒன்று அமைந்தது. இந்தத் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியைப் பகிர்ந்த விக்கிலீக்ஸ், “விக்கிலீக்ஸ் மீது விசாரணைக்கு, ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்” என்று அதைக் குறிப்பிட்டிருந்தது.