‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், “ஒரு தேசிய அவமானம்” என, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளருமான கொலின் பவல் தெரிவித்துள்ளார். அவரது மின்னஞ்சல்கள், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவோரால் ஊடுருவப்பட்டு (ஹக்), வெளியிடப்பட்டுள்ளன. அதிலேயே, இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்காவில் பிறக்கவில்லையெனவும் தனது பிறப்புச் சான்றிதழை அவர் வெளியிட வேண்டுமெனவும், 2008ஆம் ஆண்டு தொடக்கம் பிரசாரத்தை மேற்கொண்டு வந்த ட்ரம்ப்பின் இயல்பைக் கண்டித்த பவல், ஜனாதிபதி ஒபாமாவின் பிறப்புச் சான்றிதழைக் கேட்ட இனவாதிகளுடன், தன்னை அவர் இணைத்துக் கொண்டு செயற்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

பிறப்புச் சான்றிதழை ஜனாதிபதி வெளியிட்ட பின்னர், அவ்விடயத்துடன் ட்ரம்ப் தன்னை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பவல், “அவர் (ஒபாமா) ஒரு முஸ்லிம் என்பதை பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் அவர் (ட்ரம்ப்) தெரிவித்தார். நான் முன்னரே தெரிவித்ததைப் போன்று, “அவர் அவ்வாறு முஸ்லிமாக இருந்தால் தான் என்ன?’ அமெரிக்கர்களாக முஸ்லிம்கள், தினமும் பிறக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

தற்போது, கறுப்பினத்தவர்களைக் கவருவதற்கான முயற்சிகளில் ட்ரம்ப் ஈடுபட்டுவரும் நிலையில், அதையும் பவல் சாடினார். “அவர் (ட்ரம்ப்) தெரிவிக்கும் எந்தக் கருத்தும், கறுப்பின வாக்காளர்களை அவர் வசம் இழுக்காது. ஆகவே அவர், சொல்லும் விடயங்களை வெள்ளையினத்தவர்களுக்கே சொல்லலாம். தற்போது அவருக்கு கறுப்பின வாக்காளர்களிடையே 1 சதவீத ஆதரவு காணப்படுகிறது, அது இன்னமும் குறைவடையும். எங்களை அவர் முட்டாள்களென நினைக்கிறார்.

ஒபாமாவைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக பிறப்புச் சான்றிதழ்களைக் கோரியதன் காரணமாக அல்லது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அவருக்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பதைப் பார்ப்பதற்காக அவரது பாடசாலைச் சான்றிதழ்களைக் கோரியதன் மூலம், அவர் (ட்ரம்ப்) செய்தவற்றை, அவரால் திருத்த முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் மீதும், அவர் விமர்சனங்களையே வெளிப்படுத்தியுள்ளார். ஹிலாரியைப் பேராசை பிடித்தவர் என்றழைத்த அவர், “அவர் தொடும் எல்லாவற்றையும் அவர், நாசப்படுத்திவிடுவார்” என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் மீதே, அவரது காரசாரமான விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பதோடு, அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

ஹக் செய்யப்பட்ட இந்த மின்னஞ்சல்கள், கடந்த மாதம் ஓகஸ்ட் வரை அனுப்பப்பட்டவை என்பதோடு, பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி றொனால்ட் றேகனுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராகச் செயற்பட்ட பவல், ஜனாதிபதிகள் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷுக்கும் பில் கிளின்டனுக்கும் பணியாற்தொகுதிகளின் இணைத் தலைவராகச் செயற்பட்டதோடு, பின்னர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஜனாதிபதிக் காலத்தில், இராஜாங்கச் செயலாளராகச் செயற்பட்டிருந்தார். இராஜாங்கச் செயலாளராகப் பதவி வகித்த முதலாவது ஆபிரிக்க அமெரிக்கர் அவராவார்.